Published : 26 Sep 2021 03:26 AM
Last Updated : 26 Sep 2021 03:26 AM
நாமக்கல் மாவட்ட தொழில்மையம் சார்பில் ஏற்றுமதியாளர் சங்கமம் கருத்தரங்கு நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்துப் பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் படித்த இளைஞர்கள், சிறு, குறு தொழில் முனைவோர்கள் அதிக அளவில் உள்ளனர். வேளாண் விளைபொருட்கள் மற்றும் ஏனைய உற்பத்தி தொழில்கூடங்கள் அதிக அளவில் உள்ளன. இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றத்தால் எளிதில் வெளிநாடுகளில் இருந்து அவர்களுக்குத் தேவையான வடிவமைப்பில் பொருட்களை உற்பத்தி செய்து அனுப்ப முடியும். ஏற்றுமதியின் மூலம்தான் ஒருநாடு வளர்ந்த நாடாக உருவாக முடியும்.
மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்து முட்டையும், வெப்படைப் பகுதியிலுள்ள நூற்பாலைகள் மூலமாக விஸ்கோஸ் நூலிழையும், ஏளுர், பெரியமணலி, வெண்ணந்தூர் ஆகிய பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் துண்டு, போர்வை போன்ற ஜவுளிப் பொருட்களும், பரமத்தி வேலூர் பகுதியிலிருந்து மெருகூட்டப்பட்ட மற்றும் மெருகூட்டப்படாத கிரானைட் கற்களும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இதுபோல் திருச்செங்கோடு பகுதியில் இருந்து ஆழ்துளை கிணறு அமைக்கும் இயந்திரங்கள் ஆகியவை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி நாமக்கல் மாவட்டம் தமிழ்நாட்டில் முன்னணி தொழில் மாவட்டமாக விளங்குவதோடு மட்டுமின்றி முன்னணி ஏற்றுமதி மாவட்டமாக உயர வேண்டும், என்றார்.
முன்னதாக நாமக்கல் மாவட்டத்தில் இருந்து ஏற்றுமதி செய்யக்கூடிய விளைபொருட்கள் குறித்தும், விவசாயிகளின் கேள்விகளுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது. மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் க.ராசு, உதவிப் பொறியாளர் ராமகிருஷ்ணசாமி, நாமக்கல் மாவட்ட குறு, சிறு தொழிற்சாலைகள் சங்கத்தலைவர் என். இளங்கோ. மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வி. சதீஷ்குமார் உள்பட தொழில்முனைவோர், ஏற்றுமதியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT