Published : 19 Sep 2021 03:13 AM
Last Updated : 19 Sep 2021 03:13 AM
கரோனா தொற்று பரவலைத் தடுக்க, கோவை மாவட்டத்தில் இன்றுகூடுதல் கட்டுப்பாடுகள் அமலாகின்றன.
கோவை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய சூழலில், மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் 2 சதவீதமாக உள்ளது.
மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 2.39 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சைக்கு பின்னர் 2.35 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க, நோய் தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ள மாவட்ட நிர்வாகத்தினர், கரோனா வழிகாட்டுநெறிமுறைகளை மீறுபவர்கள் மீதுஅபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதேபோல், தொற்று பரவலைத் தடுக்க, அந்தந்தசூழலுக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை யும் மாவட்ட நிர்வாகத்தினர் விதித்துவருகின்றனர்.
குறிப்பாக, கடந்த சில வாரங்களாக மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள முக்கிய பகுதிகளில்சனி, ஞாயிறுகளில் கடைகள், நிறுவனங்கள் திறக்க மாவட்ட நிர்வாகத்தினர் தடை விதித்துள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை தொற்று பரவலை ஓரளவு குறைக்க கைகொடுத்தது.
கோவை மாவட்டத்தில் வஉசி உயிரியல் பூங்கா, தாவரவியல் பூங்கா ஆகிய பிரதான பூங்காக்கள் உட்பட மாவட்டம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட பூங்காக்கள் உள்ளன.
60-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ளன. ஏராளமான எண்ணிக்கையில் பொழுது போக்கு, சுற்றுலா மையங்கள் உள்ளன. இப்பகுதிகளில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்டம் களை கட்டும். தற்போது மாவட்டத்தில் தொற்று மீண்டும் அதிகரித்து வரும் சூழலில், மேற்கண்ட பகுதிகளில் மக்கள், சமூக இடைவெளியின்றி திரண்டால் தொற்று பரவல் தீவிரமாகிவிடும் வாய்ப்புகள் உள்ளன என சமூக செயல்பாட்டாளர்கள் தரப்பில் கூறப்பட்டு வந்தன. எனவே, தொற்று பரவலை மேலும் குறைக்க, ஞாயிற்றுக்கிழமை தினங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் பிறப்பித்தார்.
அதாவது, ஞாயிற்றுக்கிழமை களில், மாவட்டத்தில் உள்ள அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கறிக்கடைகள், மளிகைக்கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகள், நிறுவனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மால்கள் எனப்படும் பன்னடுக்கு வணிக வளாகங்கள், திரையரங்குகள், பூங்காக்கள், சுற்றுலா தலங்கள் ஆகியவைஇயங்கவும் தடை விதிக்கப்பட்டுள் ளது.
உணவகங்கள், பேக்கரிகள் திறந்து இருந்தாலும், பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதிக்கப்பட் டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் இந்த புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் அமலுக்கு வருகின்றன.
இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்தினர் கூறும்போது, ‘‘தொற்று பரவலைத் தடுக்க ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதல் கட்டுப்பாடுகளை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார்.
இந்த கட்டுப்பாடுகள் இன்று முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, அந்தந்த உள்ளாட்சித்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இணைந்து கண்காணிப்பர். தடையை மீறி செயல்படும் நிறுவனங்கள், கடைகள் மீதும், கரோனா பரவல் வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT