Published : 19 Sep 2021 03:16 AM
Last Updated : 19 Sep 2021 03:16 AM

திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் இன்று - 1,584 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம் : 2.06 லட்சம் பேருக்கு செலுத்த இலக்கு நிர்ணயம்

திருச்சி

திருச்சி சரகத்துக்குட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் இன்று (செப்.19) 1,584 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் கள் நடைபெறுகின்றன. இவற்றில் மொத்தம் 2.06 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. மேலும், கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 12) நடைபெற்ற சிறப்பு முகாம்களில் ஏராளமானோருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

இந்நிலையில், 2-வது வாரமாக இன்று(செப்.19) கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள் மற்றும் சத்துணவு, அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

இதில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய 2 வகையான தடுப்பூசிகளும் முதல் அல்லது இரண்டாம் தவணையை செலுத்திக் கொள்ளலாம். எனவே பொதுமக்கள் தங்களது ஆதார் அட்டை மற்றும் செல்போன் எண்ணுடன் தங்களது பகுதியிலுள்ள முகாமுக்குச் சென்று தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருச்சி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 256 இடங்கள், நகர்ப்புறப் பகுதிகளில் 126 இடங்கள் என 382 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளன. 55 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில்...

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று கரோனா தடுப்பூசி முகாம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆட்சியர் கவிதா ராமு பேசும்போது, ‘‘புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி, கந்தர்வக்கோட்டை, திருமயம், அரிமளம், விராலிமலை ஆகிய வட்டாரங்கள் மற்றும் புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் மொத்தம் 189 இடங்களில் செப்.19-ம் தேதி (இன்று) கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இவற்றில் 20,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. மற்ற பகுதிகளில் வேறொரு நாளில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்றார்.

கரூர் மாவட்டத்தில்...

கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி 165, கரூர் 96, கிருஷ்ணராயபுரம் 196, குளித்தலை 162 என 619 இடங்கள் மற்றும் 5 நடமாடும் முகாம்கள் என 624 இடங்களில் இன்று கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன.

இவற்றில், செவிலியர், குழந்தைகள் நல மைய பணியாளர்கள், சுயஉதவிக் குழு உறுப்பினர், ஆசிரியர்கள் என மொத்தம் 3,744 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 1 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் த.பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தில்....

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (செப்.19) 189 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

இவற்றில், 12 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணியில் மொத்தம் 1,200 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் ப. வெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில்...

அரியலூர் மாவட்டத்தில் 200 மையங்களில் 19,000 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x