Published : 04 Sep 2021 03:14 AM
Last Updated : 04 Sep 2021 03:14 AM
பட்டு வளர்ச்சித்துறையில் முறைகேடாக பணி நியமனம் பெற்ற வர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று தமிழ்நாடு பட்டுவளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணன் தலைமை யில் நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது:
பட்டுவளர்ச்சித் துறையில் கடந்த 2014, 2016 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் உதவி பட்டு ஆய்வாளர், இளநிலை பட்டு ஆய்வாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் நடைபெற்றது. இப்பணியிடங்கள் போலி சான்றிதழ்கள் மற்றும் இனசூழற்சிமுறை, இடஒதுக்கீடு விதிமுறைகள் மீறப்பட்டு முறைகேடாக தகுதியற்ற வர்கள் நியமனம் செய்யப் பட்டுள்ளனர். மேலும், முறை கேடாக பணி பெற்றவர்களை பாதுகாக்க, பதவி உயர்வு வழங்கி உள்ளனர்.
இதன் மூலம் ரூ.25 கோடி வரை ஊழல் நடைபெற்று உள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் விதிமுறைகளும் மீறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கடந்த ஆட்சிக்காலத்தில் பல்வேறு மனுக்கள் அளித்தும் எவ்வித பயனும் இல்லை. தற்போது அதே நிலை நீடிக்கிறது. மேலும், இதுதொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில் 375 பக்கம் ஆதாரத்துடன் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. எனவே முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் மீது தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பணித்திறன் பெற்ற முதுநிலையாளர்களுக்கு முறையான பதவி உயர்வை வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, பட்டுவளர்ச்சித்துறையில் 10 ஆண்டுகள் பணி முடித்த தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தரக்கோரி மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT