Published : 01 Sep 2021 03:17 AM
Last Updated : 01 Sep 2021 03:17 AM

கீழ்பவானி வாய்க்கால் உடைப்பு காரணமாக - நீர் நிறுத்தப்பட்டதால் 30 ஆயிரம் ஏக்கரில் நெல் நாற்றுகள் பாதிப்பு : சீரமைப்பு பணி முடிந்து 10-ம் தேதி தண்ணீர் திறக்க வாய்ப்பு

ஈரோடு

கீழ்பவானி வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் நீர் திறப்பு நிறுத்தப்பட்ட நிலையில், நெல் நாற்றுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு உட்பட்ட 1 லட்சத்து 3500 ஏக்கர் நிலத்திற்கு ஆகஸ்ட் 15-ம் தேதி நீர் திறக்கப்பட்டது. நசியனூரை அடுத்த கண்ணவேலம்பாளையம் பகுதியில், கீழ்பவானி வாய்க்கால் கட்டுமானத்தில் உடைப்பு ஏற்பட்டு நீர் வெளியேறியது. இதையடுத்து நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. சீரமைப்புப் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் எம்.துளசிமணி கூறியதாவது:

பவானிசாகர் அணையில் இருந்து 200 கி.மீ.தூரம் பயணிக்கும் கீழ்பவானி வாய்க்காலில், இதுவரை இதுபோன்ற உடைப்பு ஏற்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டதில்லை. விவசாயிகளின் கருத்துக்களைக் கேட்காமல் அவசரமாக மேற்கொள்ளப்பட்ட கட்டுமானப்பணியே உடைப்புக்கு காரணமாகும். இதே போன்று வாய்க்காலில் 30 இடங்களில் கட்டுமானம் நடைபெறுவதாய் இருந்தது. இந்த உடைப்பினைத் தொடர்ந்து, அந்த பணிகளை தற்போது நிறுத்தி வைக்க வீட்டு வசதித் துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

கீழ்பவானி பாசனத்தில் வாய்க்கால் மற்றும் கிணற்றுப் பாசனத்தை நம்பி விவசாயிகள் உள்ளனர். ஆகஸ்ட் 15-ல் திறக்கப்பட்ட நீர் தங்களுக்கு கிடைக்கும் என நினைத்து, சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் நெல் நாற்று விட்ட விவசாயிகள், தற்போது தண்ணீர் நிறுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், கரும்பு, வாழை, மஞ்சள், மரவள்ளிக்கிழங்கு பயிரிட்ட விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, என்றார்.

தமிழ்நாடு சிறு குறு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத்தலைவர் சுதந்திரராசு கூறும்போது, விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், விவசாயிகளின் கருத்தை கேட்டபின்னர், கீழ்பவானி சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு இருக்க வேண்டும். பவானிசாகரில் இருந்து ஒருபுறம் உபரி நீர் வெளியேறும் நிலையில், கீழ்பவானி விவசாயிகளின் நிலம் வறண்டு காணப்படுகிறது. உடைப்பு ஏற்பட்ட இடத்தில் கட்டுமானப்பணிகள் வேகமாக நடப்பது ஆறுதல் அளிக்கிறது.

இந்த பணிகளை முடித்து செப்டம்பர் 10-ம் தேதி சோதனை ஓட்டமாக நீர் திறக்கவுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, என்றார்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பேசியபோது, ஏற்கெனவே பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் மூலம் சீரமைப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இன்னும் 10 நாட் களுக்குள் முடிக்க முடியும் என ஒப்பந்ததாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுமையாக பணி முடிந்ததும், குறைந்த அளவு நீர் திறக்கப்பட்டு, சோதனை நடத்தியபின்னர், வழக்கமான அளவு நீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x