Published : 31 Aug 2021 03:14 AM
Last Updated : 31 Aug 2021 03:14 AM
தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் மாநகராட்சியில் இணைக்கப்படவுள்ள பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளின் விவரங்கள் தொடர்பான கருத்துருக்களை கேட்டு, ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர், தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர், கும்பகோணம் நகராட்சி ஆணையர், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநருக்கு தஞ்சாவூர் ஆட்சியர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது: தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கையின்போது, கும்பகோணம் மாநகராட்சி தரம் உயர்த்தப்படும், தஞ்சாவூர் மாநகராட்சி விரிவுபடுத்தப்படும், அதிராம்பட்டினம் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கும்பகோணம் மாநகராட்சியுடன் தாராசுரம், சுவாமிமலை, திருநாகேஸ்வரம் ஆகிய பேரூராட்சிகளும், திருவலஞ்சுழி, வலையப்பேட்டை, அம்மாசத்திரம், அண்ணலக்ரஹாரம், பாபுராஜபுரம், அசூர், பழவத்தான்கட்டளை, கொரநாட்டு கருப்பூர், சாக்கோட்டை, பெருமாண்டி, உள்ளூர், உமாமகேஸ்வரபுரம், தேப்பெருமாநல்லூர், பட்டீஸ்வரம், சோழன்மாளிகை, சீனிவாசநல்லூர், ஏரகரம் ஆகிய 17 ஊராட்சிகளும் இணைக்கப்பட உள்ளன.
அதேபோல, தஞ்சாவூர் மாநகராட்சியுடன் வல்லம் பேரூராட்சி, கடகடப்பை, மாரியம்மன்கோவில், புதுப்பட்டினம், விளார், நாஞ்சிக்கோட்டை, இனாத்துக்கான்பட்டி, பிள்ளையார்பட்டி, நீலகிரி, ராமநாதபுரம், மேலவெளி, பள்ளியேறி, மணக்கரம்பை, கத்திரிநத்தம், ஆலங்குடி, புலவர்நத்தம் ஆகிய ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளன. இதுதொடர்பாக, அந்தந்த உள்ளாட்சி அமைப்பின் அதிகாரிகள் ஆக.31-ம் தேதிக்குள் (இன்று) கருத்துருக்களை அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT