Published : 28 Aug 2021 03:15 AM
Last Updated : 28 Aug 2021 03:15 AM

மா சாகுபடியில் தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கு நேரடி பயிற்சி :

பையூர் வேளாண்மை மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் மா சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட பயிற்சியை ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரி

மா மரத்தில் கிளை மேலாண்மை மற்றும் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு நேரடி பயிற்சி அளிக்கப்பட்டதை ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் பையூரில் வேளாண்மை மண்டல ஆராய்ச்சி நிலையத்தில், மா மரத்தில்கிளை மேலாண்மை மற்றும் சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு நேரடி பயிற்சி நடை பெற்று வருகிறது. உயர் நடவு செய்யப்பட்ட மாமரங்களில் கிளை மேலாண்மைக்கான செயல்முறைகளை தோட்டக்கலை பேராசிரியர் ஜீவஜோதி பயிற்சி அளித்தார்.

மா ரகங்களைப் பற்றி விவசாயிகளுக்கு பேராசிரியர் பரசுராமன், மா சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து மண்டல ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் குரு, பிரபு மற்றும் முனைவர் விஜயகுமார் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

பயிற்சியை மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி பார்வையிட்டார். அப்போது, இப்பயிற்சியை மா விவசாயிகள் முழுமையாக பயன் படுத்திக் கொண்டு, மா உற்பத்தியை மேம்படுத்தி அதிக வருமானம் ஈட்டி பயன்பெற வேண்டும், என்றார்.

இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியிடப்பட்ட நெல் ரகங்கள் மாவட்டத்தில் பெருமளவில் பயிரிடப்படும் ரகங்களையும், உயிர் உரங்கள், உயிர் நுண்ணுயிர் கொல்லிகள் தயாரிக்கும் ஆய்வகத்தையும், பல்கலைக் கழகத்தின் மூலம் விவசாயிகளுக்கு தயாரித்து கொடுக்கப்படும் பேசில்லஸ் சப்டிலிஸ் மற்றும் டிரைக்கோடெர்மா விரிடி உயிர்க் கொல்லிகளையும், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் பயிர் செய்யப்பட்டுள்ள பல்வேறு நெல், ராகி மற்றும் சிறுதானிய விதை மையத்தை பார்வையிட்டு, அப்பயிர்களின் விளைச்சல் தன்மை, நோய் மேலாண்மை உட்பட பல்வேறு சிறப்பம்சங்களை ஆட்சியர் கேட்டறிந்தார்.

ஆய்வின் போது ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணமூர்த்தி, வேளாண் அலுவலர் அருள் தாஸ், வட்டாட்சியர் பிரதாப், மா விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x