Published : 24 Aug 2021 03:16 AM
Last Updated : 24 Aug 2021 03:16 AM
மதுரை ஆதீனத்தின் 293-வது ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் முடிசூட்டப்பட்டார். இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் முக்கிய ஆதீனங்கள் கலந்து கொண்டு ஆசி வழங்கினர்.
தமிழகத்தின் மிகப் பழமையான சைவத் திருமடங்களில் ஒன்று மதுரை ஆதீனம். மதுரை தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ள இந்த ஆதீனம் சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு சைவ சமய நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது.
மதுரை ஆதீனத்தின் 292-வது ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் இருந்தார். அவர் உடல்நலக் குறைவால் கடந்த 13-ம் தேதி முக்தி அடைந்தார்.
அன்றே புதிய ஆதீனம் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தருமபுரி ஆதீனத்தின் 27-வது குரு மகா சன்னிதானம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானதேசிக பராமாச்சாரிய சுவாமிகள், ’முக்தி அடைந்த மதுரை ஆதீனம் அருணகிரிநாதரால் நியமிக்கப்பட்ட இளைய சன்னிதானம் ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், புதிய ஆதீனமாகத் தேர்வு செய்யப்படுவார்' என்று அறிவித்தார்.
அருணகிரிநாதரின் 10 நாள் குரு பூஜைக்குப் பிறகே மதுரை ஆதீன மடத்தில் 293-வது ஆதீனம் பட்டாபிஷேக விழா நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி மதுரை ஆதீன மடத்தில் 293-வது ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பீடத்தில் அமரும் நிகழ்வு நேற்று நடந்தது. இவருக்கு தருமபுரி ஆதீனத்தின் 27-வது குரு மகா சன்னிதானம் கைலை மாசிலாமணி தேசிக ஞானதேசிக பராமாச்சாரிய சுவாமிகள் 293-வது ஆதீனமாக பட்டாபிஷேகம் சூட்டினார்.
அதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம், பேரூர், குன்றக்குடி, திருப்பனந்தாள், சிரவை உட்பட தமிழகத்தின் முக்கிய ஆதீனங்கள் புதிய ஆதீனத்துக்கு ஆசி வழங்கினர். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சார்பில் அதன் செயல் அலுவலர் செல்லத்துரை புதிய ஆதீனத்துக்கு மரியாதை செலுத்தினார். இந்து மதத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள், பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று புதிய ஆதீனத்திடம் ஆசி பெற்றனர்.
பீடத்தில் அமர்ந்த பின்பு, மடத்தில் பிற்பகல் 1.30 மணியளவில் மாகேஸ்வர பூஜை, மாலையில் மீனாட்சி சுந்தரேசுவரர் வழிபாடு, அதையடுத்து குரு மூர்த்தி சிறப்பு வழிபாடு, இரவு 8 மணிக்கு மேல் பட்டினப்பிரவேசம், கொலுக்காட்சி ஆகியவை நடைபெற்றன.
வாழ்க்கைக் குறிப்பு
மதுரை ஆதீன மடத்தின் 293-வது ஆதீனமாகப் பொறுப்பேற்ற ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் நெல்லை டவுனைச் சேர்ந்த காந்திமதிநாதன் பிள்ளை - ஜானகி அம்மாள் தம்பதியினருக்கு 25.3.1954-ல் மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் பகவதி லட்சுமணன்.
தனது 21-வது வயதில் குன்றக்குடி ஆதீனத்தில் ஆறுமுகத் தம்பிரானாகவும், 1976-ம் ஆண்டு முதல் 1980-ம் ஆண்டு வரை தருமபுரி ஆதீனத்தில் நெல்லையப்பத் தம்பிரானாகவும், 1980 முதல் 2019-ம் ஆண்டு வரை திருவாவடுதுறை ஆதீனத்தில் சுந்தரமூர்த்தி தம்பிரானாகவும் 39 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார்.
மதுரை ஆதீனத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 6-ம் தேதி அருணகிரிநாதரால் சமய, விசேஷ நிர்வாண தீட்சை செய்து ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் எனப் பெயர் சூட்டப்பட்டு இளைய ஆதீனமாக அறிவிக்கப்பட்டு தற்போது ஆதீனமாகப் பொறுப்பேற்றுள்ளார்.
//இன்சர்ட் பாக்ஸ்கள்//
ஆதீனத்தின் 6 உத்தரவுகள்
மதுரை ஆதீனமாகப் பொறுப்பேற்ற ஞானசம்பந்த தேசிகப் பரமாச்சாரிய சுவாமிகள், மதுரை ஆதீனம் சார்பில் ‘மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உஷாகால கட்டளைகள் தொடர்ந்து நிறைவேற்றப்படும், மதுரை ஆதீன திருமடத்தில் நித்ய பூஜை, மாகேஸ்வர பூஜை மற்றும் அன்னதானம் வழங்கப்படும், மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமான 4 கோயில்களிலும் நித்யபடி பூஜைகள் தினமும் நடத்தப்படும், குடமுழுக்கு உள்ளிட்ட திருப்பணிகளை விரைவுபடுத்த வேண்டும்’ என்பன உட்பட 6 உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT