Published : 24 Aug 2021 03:16 AM
Last Updated : 24 Aug 2021 03:16 AM

வடாற்காடு மாவட்டத்தில் - 26-ம் தேதி முதல் ஹாலிவுட் படங்களுடன் : திரையிட தயாராகும் திரையரங்குகள் : விநாயகர் சதுர்த்திக்கு புதிய தமிழ் படங்கள் ரிலீசாகும் என தகவல்

வேலூர்

வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய வடாற்காடு மாவட்டத்தில் ஹாலிவுட் படங்களுடன் வரும் 26-ம் தேதி முதல் திரையரங்குகள் செயல்படவுள்ளன.

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வில் திரையரங்கு களில் 50 சதவீதம் இருக்கைகளுடன் 23-ம் தேதி முதல் (நேற்று) செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 4 மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்படவுள்ளதால் முழு அளவில் செயல்பட பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதுடன் கிருமி நாசினி தெளித்தும், 50 சதவீதம் ரசிகர்கள் அமர்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தி.மலை மாவட்டங்களை உள்ளடக்கிய வடாற்காடு மாவட்டத்தில் 80 திரையரங்குகள் உள்ளன. அரசின் உத்தரவு இருந்தாலும் நேற்று படங்கள் எதுவும் திரையிடப்படவில்லை. ஓரிரு நாட்களுக்குப் பிறகே படங்களை திரையிட திரையரங்க உரிமையாளர்கள் தயாராகி வருகின்றனர்.

இது தொடர்பாக வடாற்காடு மாவட்ட திரையங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ‘எஸ்’ பிக்சர்ஸ் சீனிவாசன், ‘இந்து தமிழ் திசை' செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘திரையரங்கு களில் உடனடியாக திரைப்படங்களை திரையிட முடியாத நிலை உள்ளது. ஊரடங்கால் திரையரங்க பணியாளர்கள் பலர் மாற்றுப் பணிக்கு சென்றுள்ளனர். அவர்களை, மீண்டும் பணிக்கு திரும்ப அழைக்க வேண்டும். புதியவர்களை நியமிக்க வேண்டி இருக்கிறது.

வழக்கமான கரோனா பாதுகாப்பு நடைமுறை பணிகளுடன் புரஜெக்டரை சுத்தம் செய்து இயக்கிப் பார்ப்பது, ஏ.சி.க்களை சுத்தம் செய்ய வேண்டிய பணி பெரிதாக இருக்கும். இதனால், வரும் 26-ம் தேதி சுமார் 60 திரையரங்குகளில் படங்கள் திரையிடப்படும். முதல் நாளில் பழைய படங்களுடன் ஹாலிவுட் படங்களை திரையிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

விரைவில், காஞ்சுரிங்-3 என்ற ஹாலிவுட் திரைப்படம் வெளியாக உள்ளது. செப்டம்பர் 3-ம் தேதி ஹாலிவுட் ஆக் ஷன் படமான பாஸ்ட் அண்டு பியூரியஸ்-9 என்ற படம் வெளியாகவுள்ளது. செப்டம்பர் 10-ம் தேதி விநாயகர் சதுர்த்திக்கு சில புதிய தமிழ் படங்களும் அதன்பிறகு புதிய படங்களின் வருகை வரிசையாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்’’ என தெரிவித்தார்.

சில திரையரங்க உரிமையாளர்கள் வரும் 27-ம் தேதி (வெள்ளிக்கிழமை) தினத்தில் படங்களை திரையிட திட்டமிட்டுள்ளனர். கடந்த 4 மாதங்களுக்குப் பிறகு திரையரங்கள் மீண்டும் செயல்படவுள்ள நிலையில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான நயன்தாரா நடித்த நெற்றிக்கண் உள்ளிட்ட சில படங்களை திரையிடவும் திரையங்க உரிமையாளர்கள் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. திரையரங்கில் படங்களை பார்க்கவும் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x