Published : 22 Aug 2021 03:14 AM
Last Updated : 22 Aug 2021 03:14 AM
ஈரோட்டில் அரசு ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் இரு பிரிவுகளாகப் பிரிந்து கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு பிரிவின் தலைவர் உள்ளிட்டோர் போலீஸ் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாநிலத் தலைவர் அன்பரசன் தலைமையிலும், மற்றொரு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வி தலைமையிலும் செயல்படுகிறது.
தமிழ்ச்செல்வி தலைமையிலான சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் ஈரோடு மாவட்டம் பவானியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, ஈரோட்டில் உள்ள ஓட்டலில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இதில், சங்கத்தின் மாநிலபொதுச் செயலாளர் ஜெ.லட்சுமிநாராயணன் கூறியதாவது:
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்க கோரினோம். ஆனால், நிதிச்சுமையால் இந்த ஆண்டு அகவிலைப்படி உயர்வு இல்லை என்று அறிவித்து விட்டனர். ஏற்கெனவே, சரண்டர் தொகை வழங்க இயலாது என தமிழக அரசு அறிவித்ததால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இழப்பைச் சந்தித்துள்ளனர்.
இந்த கோரிக்கைகளுடன், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியன் மீதான நடவடிக்கையை கைவிடுதல் போன்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆகஸ்ட் 31-ம் தேதி, கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்வது, வரும் செப்டம்பர் 9-ம் தேதி ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
செய்தியாளர் சந்திப்பு நடந்த போது, அங்கு வந்த வீரப்பன்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன் தலைமையிலான போலீஸார், ‘பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த உங்களுக்கு அனுமதி வழங்கவில்லை. உடன் கூட்டத்தை முடித்து கொண்டு வெளியேறுங்கள்’ என்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மற்றொரு பிரிவின் மாநில துணைத் தலைவர் மு.சீனிவாசன் தலைமையில் வந்த 50 பேர், அறை வாயிலில் நின்று, கண்டன கோஷம் எழுப்பினர். பத்திரிகையாளர் சந்திப்பு நடந்த அறைக்குள் செல்ல முயன்ற அவர்களை போலீஸார் தடுத்தனர். அதன்பின்னர், தமிழ்ச்செல்வி தலைமையிலான நிர்வாகிகள் போலீஸ் பாதுகாப்புடன் அங்கிருந்து வெளியேறினர்.
இதுகுறித்து அரசு ஊழியர் சங்கத்தின் மற்றொரு பிரிவின், மாநில துணைத் தலைவர் சீனிவாசன் கூறியதாவது:
கடந்த 2019-ல் தஞ்சாவூரில் நடந்த மாநில செயற்குழுக் கூட்டத்தில் வெற்றி பெற்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், லோகோவை முறையாக பயன்படுத்துகிறோம். அப்போது தோல்வி அடைந்து, வெளியேற்றப்பட்டவர்கள் போலி சங்கத்தை நடத்தி சங்கத்திலும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்.
சில அரசியல் கட்சிகளின் பின்னணியில் இயங்கும் போலி சங்கத்தினர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கொடி, லோகோ, பெயரை பயன்படுத்தக்கூடாது. இந்நிலையில், அரசு ஊழியர் சங்கத்தின் பெயரில் ரகசியமாக கூட்டத்தை நடத்தி, சங்கப் பெயரை பயன்படுத்தியதால், அவர்களை கைது செய்ய வேண்டும், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT