Published : 14 Aug 2021 03:21 AM
Last Updated : 14 Aug 2021 03:21 AM
காரைக்கால் மாவட்ட நலவழித் துறை மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு திட்டம் ஆகியவற்றின் சார்பில், நெடுங்காடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலம் பருத்திக்குடி அங்கன்வாடி மையத்தில் டெங்கு உலர் நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஆனந்த், முதுநிலை சுகாதார ஆய்வாளர் பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் அமுதா, கரோனா தடுப்பூசியின் அவசியம் குறித்தும், டெங்கு உலர் நாளின் முக்கியத்துவம் குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினார்.
நிகழ்ச்சியில், சுகாதார ஆய்வாளர் ஜெகநாதன் பேசியது:
மழைக்காலம் தொடங்கும் சூழலில், தேவையற்ற பொருட்களில் மழைநீர் தேங்கி டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. அதனால், பொதுமக்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையையும் டெங்கு உலர் நாளாக கடைபிடித்து, அவரவர் வீட்டைச் சுற்றிக் கிடக்கும் தேவையற்ற பொருட்களான டயர், பிளாஸ்டிக் கப், தேங்காய் மட்டை மற்றும் வீட்டுக்குள் நாம் பயன்படுத்தும் குளிர்சாதனப் பெட்டியின் பின்புறம் உள்ள பிளாஸ்டிக் ட்ரே உள்ளிட்ட பொருட்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பகலில் கடிக்கும் கொசுக்களிலிருந்து பாதுகாக்க குழந்தைகளுக்கு கை, கால்களை மறைக்கும் வகையில் உடை அணிவிக்க வேண்டும். காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு சுகாதார நிலையத்தை அணுக வேண்டும்.
இந்நோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் மட்டுமே குணப்படுத்த முடியும் என்றார். இந்நிகழ்ச்சியில், கிராம மக்கள் திரளானோர் கலந்துகொண்டனர். நிகழ்வில் பங்கேற்றோருக்கு டெங்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
முன்னதாக, அங்கன்வாடி ஆசிரியர் பிரதீபா வரவேற்றார். முடிவில், அங்கன் வாடி உதவியாளர் கலையரசி நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT