Published : 07 Aug 2021 03:19 AM
Last Updated : 07 Aug 2021 03:19 AM

மரவள்ளி பயிரில் மாவுப்பூச்சி தாக்குதல் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆய்வு :

சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகப்புதூரில் மாவுப்பூச்சியால் பாதிக்கப்பட்ட மரவள்ளிக்கிழங்கு பயிர்களை தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ஈரோடு/நாமக்கல்

சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகப்புதூர் பகுதியில் மரவள்ளிப் பயிரில் மாவுப்பூச்சி தாக்குதல் குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில், ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பகுதிகளில் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மரவள்ளிக் கிழங்கு பயிரில் மாவுப்பூச்சி தாக்குதல் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவுப் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரியிருந்தது. இது தொடர்பாக 'இந்து தமிழ்' நாளிதழில் செய்தி வெளியானது.

இந்நிலையில் நேற்று தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ப.தமிழ்ச்செல்வி, கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பயிர் பாதுகாப்பு மைய இயக்குநர் பிரபாகர், தோட்டக்கலை கல்லூரி முதல்வர் புகழேந்தி, பூச்சியியல் துறை பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி, ஏத்தாப்பூர் மரவள்ளிக்கிழங்கு ஆராய்ச்சி நிலைய தலைவர் வெங்கடாசலம் மற்றும் விஞ்ஞானிகள், செண்பகப் புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் மாவுப்பூச்சி தாக்குதல் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

மாவுப் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்து இக்குழுவினர் கூறியதாவது:

மாவுப் பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்ட பயிர்களை உடனடியாக அகற்றி தீயிட்டு அழிக்க வேண்டும். இதனால் மேலும் நோய் பரவாமல் தடுக்க இயலும். இயற்கை முறையில் மரவள்ளி சாகுபடி செய்யும் விவசாயிகள் மீன் அமினோ அமிலம், வேப்ப எண்ணெய், அசாடிராக்டின் இதில் ஏதேனும் ஒன்றை 100 லிட்டர் தண்ணீரில் 50 மி. லி. வீதம், 10 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கலாம்.

பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்த விரும்பும் விவசாயிகள் ப்ளோனிகாமிட் - 50 டபிள்யு.ஜி. மருந்தினை 10 லிட்டர் தண்ணீரில் 3 கிராம் அல்லது அக்ட்டரா - 25 டபிள்யு.ஜி. மருந்தினை 10 லிட்டர் தண்ணீரில் 5 கிராம் அல்லது ஸ்பைரோ டெட்ராமின் - 150 – ஓ.டி. மருந்தினை 10 லிட்டர் தண்ணீரில் 1.25 கிராம் ஆகிய மூன்று பூச்சிக்கொல்லி மருந்துகளை 10 நாட்கள் இடைவெளியில் மாற்றி மாற்றி தெளித்தால் மாவுப் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம். மாவுப்பூச்சி தாக்குதலால் ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நாமக்கல்லில் ஆய்வு

நாமக்கல் மாவட்டம் பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளி செடிகளில் மாவுப் பூச்சி தாக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் ஆய்வு செய்தார். ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகன், தோட்டக்கலை துணை இயக்குநர் கே.கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x