Published : 07 Aug 2021 03:19 AM
Last Updated : 07 Aug 2021 03:19 AM
கொல்லிமலையை அடுத்த மேக்கினிக்காடு ஊராட்சியில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தை நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் 15 வட்டாரங்களில் உள்ள 240 துணை சுகாதார நிலையங்கள் மற்றும் 37 நகர்ப்புற சுகாதார நிலையங்கள் மூலம், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
முதல்கட்டமாக கொல்லிமலை வட்டத்தில் 16 பெண் சுகாதாரத் தன்னார்வலர்களும், 1 இயன்முறை மருத்துவர், ஒரு நோய் ஆதரவு சிகிச்சை செவிலியரும் இல்லம் தேடி வரும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளார்கள்.
தொற்றா நோய் பிரிவின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் 15 வட்டாரங்களில், 50 ஆயிரத்து 415 நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதில் முதல் கட்டமாக கொல்லிமலை வட்டாரத்தில் உள்ள 1085 நோயாளிகளுக்கு ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் இத்திட்டதிற்கான மருத்துவ வாகனத்தை ஆட்சியர் தொடங்கி வைத்து, சுகாதாரத்துறை களப்பணியாளர்களுக்கு மருந்து பெட்டகத்தினை வழங்கினார். அதனைத்தொடர்ந்து, துணை சுகாதார நிலையத்தில், கர்ப்பிணித்தாய்மார்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகளை ஆட்சியர் ஸ்ரேயா சிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேக்கினிக்காடுபகுதிகளில் களப்பணியாளர்கள் மூலம் ஏற்கெனவே கண்டறியப்பட்ட நீரிழிவு நோயாளிகளின் வீடுகளுக்கு, மருத்துவக் குழுவினருடன் நேரடியாகச் சென்று ஆட்சியர் மருந்துகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் சேந்தமங்கலம் எம்.எல்.ஏ. பொன்னுசாமி, நாமக்கல் கோட்டாட்சியர் மு.கோட்டைக்குமார், சுகாதாரத் துறை துணை இயக்குநர் எஸ்.சோமசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT