Published : 06 Aug 2021 03:21 AM
Last Updated : 06 Aug 2021 03:21 AM
மக்களிடையே வாசிப்பை அதிகரிக்கும் வகையில் புதுச்சேரியில் பேராசிரியர் ஒருவர் மாலை நேரத்தில் காரில் இயங்கும் நடமாடும் இலவச நூலகத்தை தொடங்கியுள்ளார்.
புதுச்சேரி பிராந்தியமான காரைக்கால் திருநள்ளாறைச் சேர்ந்தவர் பத்ரிநாத் (38). இவர் புதுவையில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர், ‘துளிர் உதவிக்கரம் அறக்கட்டளை’ என்ற பெயரில் மாணவர்களுக்கு மாற்று வழி கல்வித்திறன் குறித்து மாலை நேர பயிற்சி, பெண்கள் மேம்பாட்டு பயிற்சி, பல்லுயிர் பாதுகாப்பு பயிற்சிகளை அளித்து வருகிறார்.
தற்போது, பொதுமக்களிடையே வாசிப்பை பழக்கப்படுத்த மாலை நேர நடமாடும் இலவச நூலகம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.
இதுபற்றி பத்ரிநாத் கூறுகையில், "எனது தாயார் விருப்பபடி வீட்டில் நூலகம் அமைத்தேன். தந்தை வாங்கிய காரும் வீட்டில் இருந்தது. கரோனாவால் இரண்டையும் பயன்படுத்த முடியாத சூழல் இருந்தது. இச்சூழலை மாற்றவும், வாசிப்பை பழக்கப்படுத்தவும் மாலை நேர நடமாடும் இலவச நூலகத்தை அமைத்து செயல்படுத்த தொடங்கியுள்ளேன்.
தற்போது காரில் 5 வகை தலைப்புகளில் 1,200 புத்தகங்கள் அடுக்குகளில் வைத்துள்ளேன்.
திங்களன்று புதுவை கடற்கரைச் சாலை, செவ்வாயன்று தாவரவியல் பூங்கா, புதன்கிழமையன்று முதியோர் இல்லம், வியாழன்று கிராமப் பகுதி, சனிக்கிழமையன்று குழந்தைகள் இல்லம், ஞாயிறன்று குடிசைவாழ் மக்கள் வாழும் பகுதியில் இந்த நூலகம் செயல்படுகிறது. பள்ளி, கல்லூரிகள் திறந்ததும் வெள்ளிக் கிழமை தோறும் இந்த நடமாடும் நூலகத்தை நடத்த திட்டமிட்டுள்ளேன்.
இரு தன்னார்வலர்கள் உடன் உதவிக்கு வருகின்றனர். காரில் இருக்கும் நூல்களின் அடுக்கை வெளியே வைத்து, மக்களே விருப்பப்பட்ட புத்தகங்களை எடுத்து படிக்க வாய்ப்பை உருவாக்குகிறோம். செல்போன் பயன்படுத்தும் வழக்கத்துக்கு சிறிது இடைவெளி விட்டு, வாசிப்பை பழக்கப்படுத்தவே இம்முயற்சி. சில இடங்களில் படிக்க விருப்பம் இருந்தும், படிக்க இயலாதோருக்கு தன்னார்வலர்கள் படித்தும் காட்டும் வழக்கத்தையும் செய்து வருகிறோம்” என்கிறார் உற்சாகமாக.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT