Published : 04 Aug 2021 03:20 AM
Last Updated : 04 Aug 2021 03:20 AM
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (5-ம் தேதி) மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் சாமனப்பள்ளி கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் என்கிற திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இத்திட்டம் தமிழகத்திலேயே முதன் முறையாக தொடங்கப்பட உள்ளது. இதற்காக இன்று (4-ம் தேதி) மாலை 4.45 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து முதல்வர் புறப்பட்டு, மாலை 5.25 மணிக்கு ஓசூர் வந்து கிருஷ்ணகிரி சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார்.
நாளை (5-ம் தேதி) காலை 9.30 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் சாமனப்பள்ளி கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதனைத் தொடர்ந்து பெரு நிறுவன சமூக பொறுப்பு நிதி (சி.எஸ்.ஆர்.) திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் முகாமை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.
பின்னர் விமானம் மூலம் காலை 11.40 மணிக்கு புறப்பட்டு சென்னை செல்கிறார். முதல்வர் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகையையொட்டி, கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் சேலம் டிஐஜி மகேஸ்வரி, எஸ்பி சாய் சரண் தேஜஸ்வி மற்றும் போலீஸார் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT