Published : 03 Aug 2021 03:16 AM
Last Updated : 03 Aug 2021 03:16 AM
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தும், தஞ்சாவூர் மாவட்ட விசைப் படகுகள் மீது நடவடிக்கை எடுக்காத மீன்வளத் துறை அதிகாரிகளை கண்டித்து, மல்லிபட்டினம் மீன்வளத் துறை அலுவலகத்தை பூட்டும் போராட்டம் நடைபெறுமென தஞ்சாவூர் மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், மல்லிப்பட்டினம் மீன்துறை அலுவலகம் முன்பு நேற்று காலை தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள், மீனவர் கிராம தலைவர்கள் நூற்றுக்கணக்கானோர் கூடினர்.
அப்போது, ‘தமிழக அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் விசைப் படகுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு துணை போகும் மீன்வளத் துறை உதவி இயக்குநரை உடனடியாக பணிநீக்கம் செய்யவேண்டும்.
அதிக குதிரைத்திறன் கொண்ட படகுகள் வாரத்தில் 7 நாட்களும் கடலில் தொழில் செய்ய அனுமதிக்கக் கூடாது. நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழிக்க ஆதரவாக செயல்படும் மல்லிப்பட்டினம் மீன் துறை அலுவலகம் தேவையில்லை' என்று வலியுறுத்தி, தஞ்சாவூர் மாவட்ட அனைத்து நாட்டுப்படகு மீனவர்களும் ஒருநாள் வேலைநிறுத்தம் செய்து, அலுவலகத்துக்கு பூட்டுப் போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அங்கு வந்த பட்டுக்கோட்டை உதவி ஆட்சியர் சீ.பாலச்சந்தர், மீன்வளத் துறை இணை இயக்குநர் ஜோய்ஸ் ஆலிவ் ரெக்சல், பட்டுக்கோட்டை டிஎஸ்பி செங்கமலக்கண்ணன், மீன்வளத் துறை உதவி இயக்குநர் சிவக்குமார் மற்றும் காவல்துறையினர், கடலோர காவல்படையினர், வருவாய்த்துறையினர், நாட்டுப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், ‘தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தும் படகுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மீன்வளத்துறை, காவல்துறை, வருவாய்த் துறையினர் இணைந்து கடலுக்குள் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, தவறிழைக்கும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதி அளித்தனர். இதையடுத்து, மதியம் 2 மணி அளவில் போராட்டம் முடிவுக்கு வந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT