Published : 23 Jul 2021 07:14 AM
Last Updated : 23 Jul 2021 07:14 AM
கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாயில் விநாடிக்கு 16,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என தாளாண்மை உழவர் இயக்கம், சமவெளி விவசாயிகள் இயக்கம் ஆகியன வலியுறுத்தியுள்ளன.
இதுதொடர்பாக, தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் தாளாண்மை உழவர் இயக்கத் தலைவர் கோ.திருநாவுக்கரசு, சமவெளி விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சு.பழனி ராசன் தலைமையில் நேற்று மனு அளிக்கப்பட்டது. விவசாய சங்க பிரதிநிதிகள் ஆர்.சந்திரசேகரன், துரை. சீனிவாசன், இரா.அருணாச் சலம், இரா.பிரசன்னா, ப.அருண் சோரி, ஏஐடியுசி மாவட்டத் துணைச் செயலர் துரை.மதிவா ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
மனு விவரம்: காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் கல்லணை முதல் கடைமடை வரை சில நாட்களாக மேற்கொண்ட கள ஆய்வில் கல்லணைக் கால்வா யில் விநாடிக்கு 1,500 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. இந்த நீர் கடைமடை வரை சென்றிருந் தாலும், கல்யாண ஓடை வாய்க் கால், ராஜாமடம் வாய்க்காலில் மட்டுமே பாசனத்துக்குத் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. மற்ற பாசன வாய்க்கால்கள் இதுவரை திறக்கப்படவில்லை.
வெண்ணாற்றைப் பொறுத்த வரை கல்லணையில் நீர் திறப்பு 500 முதல் 1,000 கன அடி வரை மட்டுமே இருக்கிறது. இந்தத் தண்ணீரும் தாணிக்கோட்டகம் ஏரி வரை மட்டுமே சென்றுள்ளது. அதற்குக் கீழ் இதுவரை பாசன நீர் திறந்துவிடப்படவில்லை.
காவிரியில் சில நாட்களாக கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. குறுவை விவசாயம் திட்டமிடப்பட்டபடி 3.50 லட்சம் ஏக்கரில் நடைபெறவும், தண்ணீர் கிடைத்தால் அதற்கு மேலும் பயிரிட தயாராக உள்ள பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில் விவசாயம் மேற்கொள்ளவும் இந்த 3 ஆறுகளிலும் குறைந்தபட்சம் விநாடிக்கு 16,000 கன அடி நீராவது திறக்க வேண்டியது அவசியம். இதற்கான அறிவுறுத்தலை பொதுப் பணித் துறைக்கு மாவட்ட ஆட்சியர் வழங்க வேண்டும்.
கல்லணை முதல் பூதலூர் வரை கல்லணைக் கால்வாய் கரையில் பல இடங்களில் மழை பெய்து அரிப்பு ஏற்பட்டிருக்கிறது. எனவே, இதை ஆய்வு செய்து கரைகளைப் பலப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT