Published : 01 Jul 2021 03:15 AM
Last Updated : 01 Jul 2021 03:15 AM

நீலகிரி மாவட்டத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு - தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு : இணையதளத்தில் விண்ணப்பிக்க அழைப்பு

உதகை

நீலகிரி மாவட்டத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

நீலகிரி மாவட்டத்தில் குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 25 சதவீதஇடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இதனை நடைமுறைப்படுத்த 2021-2022-ம் கல்வி ஆண்டில் இச்சேர்க்கையில் 100 சதவீத இலக்கை அடைய ஜூலை 5 முதல்ஆகஸ்ட் 3-ம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

பள்ளி வாரியாக 25 சதவீத சேர்க்கைக்கு உதகை வட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலகம், ஒருங்கிணைந்த கல்வித் திட்ட அலுவலகம், அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், வட்டாரவள மைய அலுவலகம், வட்டாரக் கல்வி அலுவலகத்தில் பதிவேற்றம் செய்யலாம்.அதேபோல, குன்னூர் வட்டத்தில் மாவட்ட அலுவலகம், வட்டார வள மைய அலுவலகம், வட்டாரக் கல்வி அலுவலகத்திலும், கோத்தகிரி வட்டத்தில் வட்டார வள மைய அலுவலகம், வட்டாரக் கல்வி அலுவலகத்திலும், கூடலூர் வட்டத்தில் மாவட்டக் கல்வி அலுவலகம், வட்டார வள மைய அலுவலகம், வட்டாரக் கல்வி அலுவலகத்திலும் பதிவேற்றம் செய்யலாம்.

இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய குழந்தைகளின் பிறப்புச் சான்று, மருத்துவமனை அல்லது அங்கன்வாடி பதிவேடு நகல், பாதுகாவலரால் வயதை நிரூபிக்க எழுத்து மூலம் அளிக்கப்பட்ட உறுதிமொழி, வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்புப் பிரிவினர் எனில் ஆதரவற்றோர், எச்ஐவியால் பாதிக்கப்பட்டோர், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவுத் தொழிலாளிகளின் குழந்தைகள், மாற்றுத் திறனாளி குழந்தைகளாக இருப்பின் அத்துறை அலுவலரின் சான்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மனுதாரரின் இருப்பிடத்தில் இருந்து பள்ளி அமைவிடம் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்குள் இருப்பதற்கான இருப்பிடச் சான்று, ஜாதிச்சான்று, வருமானச் சான்று, குழந்தையின் புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x