Published : 18 Jun 2021 03:16 AM
Last Updated : 18 Jun 2021 03:16 AM
சிவகங்கை அருகே நகராட்சி குப்பைக் கிடங்கில் தீப்பற்றியது. இங்கிருந்து பரவிய புகை கிராமங்களை சூழ்ந்ததால் மக்கள் தூங்க முடியாமல் தவித்தனர்.
சிவகங்கை நகரில் தினமும் 21 டன் குப்பை சேகரமாகிறது. அவை சுந்தரநடப்பு அருகே குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வந்தது. இங்கு குப்பையைத் தரம் பிரிக்காமல் எரித்து வந்தனர்.
இக்கிடங்கு அருகே உள்ள கண்மாய் மூலம் சுந்தரநடப்பு, துவங்கால், மணக்கரை பகுதிகளைச் சேர்ந்த 200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன. மழைக் காலங்களில் கருகிய குப்பையில் இருந்து வடியும் கழிவு நீர் கண்மாயில் கலந்தது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் நிலத்தடிநீரும் பாதிக்கப்பட்டது.
இதனால் இங்கு குப்பை கொட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இந்த கிடங்கில் குப்பை கொட்டுவதில்லை. ஆனால் ஏற்கெனவே கொட்டப்பட்ட பல லட்சம் டன் குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளன.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு குப்பையில் தீப்பற்றியது. அனைத்துப் பகுதிகளுக்கும் தீ பரவியது. இதையடுத்து சுந்தரநடப்பு, துவங்கால், மணக்கரை கிராமங்களில் புகைமண்டலம் பரவியது.
சிவகங்கை, திருப்பத்தூர், மானாமதுரை தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். புகை மண்டலத்தால் இரவில் தூங்க முடியாமல் கிராம மக்கள் தவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT