Published : 18 Jun 2021 03:17 AM
Last Updated : 18 Jun 2021 03:17 AM
திருப்பத்தூர் அருகே செயற்கை மணல் தயாரிப்பில் ஈடுபட்டு வந்த 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாரி, இரு சக்கர வாகனங்கள், மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காக்கங்கரை, நத்தம், சுந்தரம்பள்ளி, கசிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயற்கை மணல் தயாரிக்கப்பட்டு அவை மணல் எனக்கூறி வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு லாரி, டிராக்டர்களில் கடத்தப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் சென்றது.
இதையடுத்து, செயற்கை மணல் தயாரிப்பவர்களை அடை யாளம் கண்டு அவர்களை கைது செய்யவும், மணல் திருட்டை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என கந்திலி காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி உத்தரவிட்டார்.
அதன்பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு கந்திலி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில், கசி நாயக்கன்பட்டி கிராமத்தில் மணல் தொட்டி அமைத்து அங்கு செயற்கை மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த வெங்கடேசபுரம் பகுதியைச் சேர்ந்த திருமூர்த்தி (42), கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த விஜயன் (39), கோவிந்தராஜ் (20) உட்பட 4 பேரை தனிப்படை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ஒரு லாரி, 2 இரு சக்கர வாகனங்கள், 7 எச்பி மோட்டார் ஒன்று, 2 யூனிட் மணல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
குண்டர் சட்டம் பதிவு
திருப்பத்தூர் மாவட்டத்தில் மணல் கடத்தல், செயற்கை மணல் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்படும் என்றும், மணல் கடத்தல் குறித்து பொதுமக்கள் மாவட்ட காவல் உதவி எண் 94429-92526 என்ற வாட்ஸ் -அப் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என எஸ்.பி., சிபி சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT