Published : 09 Jun 2021 03:17 AM
Last Updated : 09 Jun 2021 03:17 AM

மத்திய அரசை கண்டித்து 300-க்கும் மேற்பட்ட இடங்களில் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் :

தஞ்சாவூர்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர் மாவட்டங்களில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மத்திய அரசின் மாநில உரிமைகள் பறிப்பு நடவடிக்கை மற்றும் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், தமிழ்நாட்டுக்குத் தேவையான கரோனா தடுப்பூசி மற்றும் மருந்து, மாத்திரைகளை உடனடியாக வழங்க வேண்டும்,

தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும், செங்கல்பட்டு எச்.எல்.எல் நிறுவனத்தை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும், வரிகளைக் குறைத்து பெட்ரோல் ரூ.50, டீசல் ரூ.40-க்கு விற்பனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் ரயிலடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு மாவட்டச் செயலாளர் முத்து.உத்திராபதி தலைமை வகித்தார். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டத்தில்...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நாகை எம்.பி எம்.செல்வராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். மன்னார்குடியில் மாநிலக்குழு உறுப்பினர் வை.செல்வராஜ், ஒன்றியச் செயலாளர் வீரமணி, இளைஞர் பெருமன்ற நிர்வாகிகள் அருள்ராஜன், பாப்பையன், மகேந்திரன் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்.

கோட்டூரில் ஒன்றியச் செயலாளர் (பொ) செந்தில்நாதன், ஒன்றியக் குழுத் தலைவர் மணிமேகலை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் வை.சிவபுண்ணியம் பங்கேற்றார்.

திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கூத்தாநல்லூர் உட்பட 100-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகை மாவட்டத்தில்...

நாகை ரயிலடித் தெருவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் நகரச் செயலாளர் குணா தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார்.கீழ்வேளூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றியச் செயலாளர் நாகராஜன் தலைமை வகித்தார்.

இந்திய மாதர் தேசிய சம்மேளன நாகை மாவட்டச் செயலாளர் மேகலா, ஏஐடியுசி மாவட்ட பொருளாளர் மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வாழக்கரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட குழு உறுப்பினர் நாகராஜன், கீழையூரில் ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் ராமலிங்கம், எட்டுக்குடியில் கிளைச் செயலாளர் மாசே துங், திருப்பூண்டியில் மாவட்ட குழு உறுப்பினர் சுப்பிரமணியன், தலைஞாயிறில் ஒன்றியச் செயலாளர் மகேந்திரன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகை மாவட்டத்தில் 15 இடங்களிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 5 இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டத்தில்...

திருச்சி உறையூரில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, பகுதிக் குழு உறுப்பினர் ஆனந்தன் தலைமை வகித்தார்.

ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் க.சுரேஷ், மேற்கு பகுதிக்குழு உறுப்பினர்கள் துரைராஜ், முருகன், மாவட்டக் குழு உறுப்பினர் இப்ராகிம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதேபோல, மாவட்டத்தில் மேலும் 13 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில்...

புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மு.மாதவன் தலைமை வகித்தார். இதேபோன்று, மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரியலூர் மாவட்டத்தில்...

அரியலூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் டி.தண்டபாணி தலைமை வகித்தார். இதேபோல, திருமானூர், மீன்சுருட்டி, பாப்பாகுடி, ஜெயங்கொண்டம், தா.பழூர் ஆகிய இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூரில்...

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வீ.ஞானசேகரன் தலைமை வகித்தார்.

கரூரில்...

கரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் என்.ரத்னம் தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x