Published : 04 Jun 2021 03:15 AM
Last Updated : 04 Jun 2021 03:15 AM

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. புதிய துணைவேந்தராக - பல்கலைக்கழத்தில் உள்ள பேராசிரியரை நியமிக்கவும் : ஊழியர் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தல்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் மனோகரன், பொதுச் செயலாளர் பழனிவேல் மற்றும் நிர்வாகிகள் போட்டியளித்தனர்.

கடலூர்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக துணைவேந்தர் டாக்டர் முருகேசன் நேற்று (ஜூன் 3) பணி ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் மனோகரன், பொதுச் செயலாளர் பழனிவேல் உள்பட ஊழியர் சங்க நிர்வாகிகள் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தராக மூன்றாண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற துணைவேந்தர் டாக்டர் முருகேசன், பல்கலைக்கழக ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு பணப்பயன், பதவி உயர்வு உள்ளிட்ட எந்த நன்மையும் செய்யவில்லை. அதுபோல் கடந்த 6 வருடங்களில் பணி ஓய்வுபெற்ற அலுவலர்கள், ஊழியர்களுக்கு 50 சதவீதம் தான் பணி பயன் தொகை கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 6 வருடங்களில் 200-க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற அலுவலர்கள், ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். துணைவேந்தர் முருகேசன் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு எந்த வளர்ச்சி திட்டத்தையும் பல்கலைக்கழகத்தில் செய்யாமல் தனது பணிக்காலத்தை வீணடித்து விட்டார். பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்ககத்தில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது 50 ஆயிரத்துக்கும் குறைவான மாணவர் சேர்க்கை தான் உள்ளது.

அதுபோல் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டிட பராமரிப்பு மோசமான நிலையில் உள்ளது. மருத்துவமனையில் போதுமான ஊழியர்களும் நியமிக்கப்படவில்லை. கரோனா காலத்தில் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் தான் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமனம் செய்யும்போது பல்கலைக்கழகத்தில் உள்ள தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் துணைவேந்தராக நியமிக்க தமிழக முதல்வர், உயர்கல்வித்துறை அமைச்சர், உயர்கல்வித்துறை செயலாளர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது சம்பந்தமாக தமிழக முதல்வர் உள்பட அமைச்சர்களை ஊழியர் சங்க நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளோம். துணைவேந்தர் முருகேசனின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளை கண்டித்து ஊழியர் சங்கம் சார்பில் துணைவேந்தர் மற்றும் பதிவாளரிடம் எழுத்து மூலமாக நாங்கள் வருத்தத்தையும், கண்டனத்தையும் தெரிவித்துள்ளோம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x