Published : 06 May 2021 03:13 AM
Last Updated : 06 May 2021 03:13 AM

உதகை மார்லிமந்து அணையில் மான்களின் எலும்புக்கூடுகள் : குடிநீர் மாசுபடும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் வேதனை

உதகை

உதகை மார்லிமந்து அணையில் மான்களின் எலும்புக்கூடுகள் கிடப்பதால், குடிநீர் மாசுபடும் நிலை ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்குள்ள பொதுமக்களுக்கு குடிநீர்வழங்குவதற்காக 10 அணைகள் உள்ளன. மார்லிமந்து அணையில் இருந்து சில வார்டுகளுக்கு குடிநீர்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த அணையையொட்டி அடர்ந்த வனப்பகுதி உள்ளது.

இங்கு காட்டெருமை, சிறுத்தை, மான், கடமான்,காட்டுப்பன்றி போன்றவனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. வேறு வனப்பகுதியில் இருந்து செந்நாய்கள் மார்லிமந்து அணைப் பகுதிக்கு இடம்பெயர்ந்து வந்துள்ளன. கடந்த சில நாட்களாக 20-க்கும்மேற்பட்ட செந்நாய்கள் கூட்டமாக சேர்ந்து, அணைக்கு தண்ணீர் குடிக்கவரும் கடமான்களை வேட்டையாடி வருகின்றன. இதனால் 10-க்கும் மேற்பட்ட வனவிலங்குகளின் எலும்புக்கூடுகள் அணையின் கரையோரத்தில் ஆங்காங்கே கிடக்கின்றன.

பகல் நேரத்திலேயே செந்நாய்கள் வேட்டையாடுவதால், அணையை ஒட்டி வசிக்கும் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ள இந்த அணையின் கரைகளில் கடமான்களின் எலும்புக்கூடுகள் கிடப்பதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். வனத்துறையினர் மார்லிமந்து அணைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டதில் 15-க்கும் அதிகமான கடமான்களின் எலும்புக்கூடுகள் கிடந்தது தெரியவந்தது. வேட்டை விலங்குகள் தான் இவற்றை வேட்டையாடியிருக்கக் கூடும் என்பதை உறுதி செய்தவனத்துறையினர் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டதில், ‘முதல் முறையாக இந்த பகுதிக்கு செந்நாய்கள்‌ வந்துள்ளன.அவை‌ கூட்டம் கூட்டமாக உலவுகின்றன. இங்கு வழக்கமாக நீர் அருந்த வரும் கடமான்களை தண்ணீரில் வைத்தே வேட்டையாடுகின்றன. இதற்கு முன்பு இந்த பகுதிக்கு செந்நாய்கள் வந்ததேயில்லை’ என தெரிவித்துள்ளனர். இதே பகுதியைச் சேர்ந்த பலரிடமும் விசாரணை மேற்கொண்டும், கடமான்களின் உடல் பாகங்கள் உண்ணப்பட்டிருக்கும் விதத்தை வைத்தும் வேட்டையாடியது செந்நாய்கள்தான் என்பதை வனத்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

இது குறித்து நீலகிரி வனக்கோட்டத்தின் உதவி வனப் பாதுகாவலர் சரவணகுமார் கூறும் போது, ‘‘மார்லிமந்து அணையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் சிறுத்தைகள், கடமான்கள் மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன.ஆனால் இந்த வனத்தில் செந்நாய்கள் இல்லை. தலைக்குந்தா அல்லதுமுதுமலை வனப்பகுதிகளில் இருந்து இவை இடம்பெயர்ந்து வந்திருக்கவே வாய்ப்புகள் ‌அதிகம். வன விலங்கு ஆய்வாளர்களைத் தொடர்பு கொண்டு பேசி வருகிறோம். இந்த பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க திட்டமிட்டுள்ளோம்’ என்றார்.

பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் அணையில் மான்களின் எலும்புக்கூடுகள் கிடப்பதால், தண்ணீர் மாசடையும் நிலை உள்ளது. இந்த தண்ணீரை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தால் தொற்று பரவும் சூழ்நிலை உள்ளது. குடிநீர் மாசடைந்து வருவதால், அணை தண்ணீரை சுத்திகரித்து பொதுமக்களுக்கு விநியோகிக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x