தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு :
நாகை காயாரோகண சுவாமி உடனுறை நீலாயதாட்சி அம்மன் கோயில் குளக்கரையில் தனி சன்னதி கொண்டுள்ள சிம்ம வாகன கால சம்ஹார பைரவருக்கு நேற்று முன்தினம் இரவு சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
முன்னதாக, பைரவருக்கு சிறப்பு யாகமும், பல்வேறு பொருட்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றன.
பின்னர், பைரவருக்கு வண்ண மலர் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. அதேபோல கோயிலின் உட்பிரகாரத்தில் உள்ள காலபைரவருக்கும் அபிஷேகம் நடைபெற்றது.
நாகூரில் உள்ள சொர்ண ஆகர்ஷண பைரவர் கோயில், வடக்கு பொய்கைநல்லூர் நந்தி நாதேஸ்வரர் கோயில், வேளாங்கண்ணி ரஜகிரீஸ்வரர் கோயில், திருவாய்மூர் தியாகராஜ சுவாமி கோயிலில் உள்ள அஷ்ட பைரவர், வாய்மேட்டை அடுத்த தகட்டூரில் உள்ள பைரவர் கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கரோனா வைரஸ் தொற்று காரணமாக, கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளதால், பக்தர்கள் இல்லாமல் பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன.
