Published : 30 Apr 2021 03:14 AM
Last Updated : 30 Apr 2021 03:14 AM
அவதானப்பட்டி பகுதியில் இயந்திரங்கள் மூலம் வைக்கோல் உருளைகளாக மாற்றப்பட்டு விற்பனை செய்யப்படுவதால், கூடுதல் வருவாய் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்று பாசனம் மூலம் நேரடியாக 26 ஆயிரத்து 924 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கால்வாய் இணைப்புகள் மூலம் 25 ஆயிரம் ஏக்கர் மூலம் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இதில் ஆற்றினை ஓட்டியுள்ள கிருஷ்ணகிரி அணை, திம்மாபுரம், மலையாண்டஅள்ளி, பையூர், கால்வேஅள்ளி, அவதானப்பட்டி, பெரியமுத்தூர், சுண்டேகுப்பம், சின்னமுத்தூர், காவேரிப்பட்டணம், தேர்பட்டி, சவுளூர், பென்னேஸ்வரமடம், நெடுங்கல், கொட்டாவூர் ஆகிய பகுதிகளில் நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது 2-ம் போக நெல் அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அணையின் கீழ் நெல் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் நெல் அறுவடைக்கு பின்பு, வைக்கோலை குவித்து வைத்து விற்பனை செய்து வந்தனர். நிகழாண்டில் இயந்திரங்கள் உதவியுடன் வைக்கோல் (உருளை) கட்டுக்கட்டாக மாற்றப்பட்டு, ஒரு கட்டு ரூ.200 வரை விற் பனை செய்கின்றனர். இதனால் கூடுதல் வருவாய் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக நாட்டாண்மைக் கொட்டாய்யைச் சேர்ந்த விவசாயி ராமலிங்கம் கூறும்போது, கால்நடைகளுக்கு முக்கிய உணவாக பயன்படும் வைக்கோலை, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை மற்றும் ஆந்திரா, கர்நாடகா மாநில எல்லையோரம் வசிக்கும் விவசாயிகள் நேரில் வந்து, வைக்கோலின் தரத்தைப் பொறுத்து விலை நிர்ணயம் செய்து வாங்கிச் செல்கின்றனர்.
விவசாய பணிக்கு ஆட்கள் பற்றாக்குறையால் தற்போது நடவு முதல் அறுவடை வரை இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்து உள்ளது. தற்போது அறுவடைக்கு பின்பு வயலில் உலர்த்தி வைக்கப்படும் வைக்கோலும், இயந்திரங்களின் உதவியுடன் (உருளை) கட்டுக்கட்டாக மாற்றப்படுகிறது. இயந்திரம் மூலம் ஒரு வைக்கோல் கட்டு உருவாக்க ரூ.40 செலவாகிறது. இதனால் வழக்கமாக விற்பனை செய்யும் நடைமுறையை விட விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது.
மேலும், வெளியூர்களுக்கு வாகனங்களில் எளிதாக ஏற்றிச் செல்ல முடிகிறது. ஒரு ஏக்கருக்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட வைக்கோல் கட்டுகள் கிடைக்கும். ஒரு கட்டு வைக்கோல் தரத்தை பொறுத்து ரூ.200க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT