Published : 30 Apr 2021 03:14 AM
Last Updated : 30 Apr 2021 03:14 AM
புளியரை அருகே குளத்துக்கு தண்ணீர் வராமல் தடுத்து புதிதாக மறுகால் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் 150 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவது கேள்விக்குறியாகி உள்ளது. புதிதாக கட்டப்பட்ட மறுகாலை அகற்றி, ஏற்கெனவே உள்ள கால்வாயை தூர்வாரி தடையின்றி தண்ணீர் செல்ல உதவ வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
தென்காசி மாவட்டம், புளியரை அருகே கத்தியூத்து குளம் உள்ளது. இந்த குளத்தின் மூலம் சுமார் 150 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில், இக்குளத்துக்கு தண்ணீர் வரும் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்காமல் புதிதாக கால்வாய் அமைத்து, தண்ணீரை ஆற்றை நோக்கி திருப்பி விட ஏற்பாடு செய்வதாகக் கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் இது தொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் புகார் கூறியுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்தவிவசாயிகள் கூறும்போது, “மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து பெரியகால் ஓடை மூலம் வரும் தண்ணீர் மேலப்பத்து குளத்துக்கு வரும். அந்தக் குளம் நிரம்பி, கொட்டாளிகுளம், சாத்தான்பத்துகுளம் நிரம்பிய பின்னர் சதியன் ஊருணிக்கு தண்ணீர் வரும். அங்கிருந்து கத்தியூத்து குளத்துக்கு தண்ணீர் செல்லும். கத்தியூத்து குளம் நிரம்பிய பின்னர் உபரி நீர் ஹரிகர நதியில் சென்று சேரும். இந்த குளங்கள் மூலம் ஏராளமான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில், சதியன் ஊருணியில் இருந்து கத்தியூத்து குளத்துக்கு தண்ணீர் வர விடாமல் செய்து, புதிதாக மறுகால் அமைத்து நேரடியாக ஆற்றுக்கு தண்ணீர் செல்லும் வகையில் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
அடைக்கல அய்யனார் குளத்தில் இருந்து கத்தியூத்து குளத்துக்கு வரும் கால்வாயை ஏற்கெனவே அடைத்து விட்டனர். அடைக்கல அய்யனார் குளத்தில் இருந்து உபரி நீர்நேரடியாக ஆற்றுக்கு செல்லும் வகையில் திருப்பி விட்டுள்ளனர்.
தற்போது, சதியன் ஊருணியில் இருந்து வரும் தண்ணீரையும் வர விடாமல்செய்ய ஏற்பாடு செய்து வருகின்றனர். இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டால், வெள்ளம் ஏற்படும் காலங்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் புதிதாக மறுகால் அமைப்பதாகவும், இதனால் குளத்துக்கு தண்ணீர் செல்வது பாதிக்கப்படாது என்றும் கூறுகின்றனர். ஏற்கெனவே உள்ள ஓடையையும் தூர்வார நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கெனவே உள்ள ஓடையை தூர்வாரினாலே தண்ணீர் தடையின்றி செல்லும். புதிதாக மறுகால் அமைப்பதால் காலப்போக்கில் ஏற்கெனவே உள்ள ஓடையை கண்டுகொள்ளாமல் விட்டு விடுவார்கள்.
இதனால் இக்குளத்தை நம்பி பாசனம் செய்யும் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். புதிய குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்காமல் புதிதாக கட்டப்பட்ட மறுகால் கட்டுமானத்தை அகற்ற வேண்டும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT