Published : 26 Apr 2021 03:18 AM
Last Updated : 26 Apr 2021 03:18 AM
முழு ஊரடங்கு காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழநி உள்ளிட்ட அனைத்து ஊர்களிலும் கடைகள் மூடப்பட்டு, வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. ஊரடங்குக்கு மக்கள் முழு ஒத்துழைப்புத் தருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு நேற்று அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் உள்ளிட்ட நகரங்களில் கடைகள் முற்றிலும் அடைக்கப்பட்டிருந்தன. வாகனப் போக்குவரத்து இல்லாததால் மக்கள் நடமாட்டம் இன்றியும் காணப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் டி.ஐ.ஜி., முத்துச்சாமி, எஸ்.பி., ரவளிப்பிரியா ஆகியோர் தலைமையில் போலீஸார் நகர் பகுதிகளில் மட்டுமின்றி கிராமப் பகுதிகளிலும் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். அனுமதியின்றி வாகனங்களில் வந்தவர்களைச் சரியான காரணங்கள் கூறியோரை மட்டுமே அனுமதித்தனர். அத்தியாவசியத் தேவையின்றி வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியதால் நகர வீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. முதல் அலை கரோனா ஊரடங்கின்போது மக்கள் பெருமளவில் ஒத்துழைப்புத் தராதநிலையில், இரண்டாவது அலையின் தீவிரத்தை உணர்ந்து மக்கள் வீட்டைவிட்டு வெளியில் வராமல் அதிக ஒத்துழைப்புத் தருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT