Published : 26 Apr 2021 03:18 AM
Last Updated : 26 Apr 2021 03:18 AM
விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் கொண்டு செல்லும் வகையில் ராமநாதபுரத்தில் பாரம்பரிய நெல் வகைகளைப் பயிரிட்டு வருகிறார் இயற்கை விவசாயி.
ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் தரணி முருகேசன். இயற்கை வேளாண் விவசாயி. இவர் ராமநாதபுரம் அருகே எட்டிவயல் கிராமத்தில் 60 ஏக்கரில் தரணி இயற்கை வேளாண் பண்ணையை அமைத்துள்ளார். இங்கு இயற்கை உரத்துக்காக குஜராத், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த உயர் ரக நாட்டுப் பசு, காளைகள், நாட்டுக் கோழி வகைகளை வளர்த்து வருகிறார்.
மேலும் மகாகனி, தோதகத்தி, மருதமரம் ஆகிய விலை உயர்ந்த மரங்கள், பழ மரங்கள் உள்ளிட்ட 40 வகையான மரங்கள், மூலிகைச் செடிகள், காய்கறி, கீரை வகைகள், தென்னை, வாழை மரங்கள், பாரம்பரிய நெல் வகைகள் ஆகியவற்றைப் பயிரிட்டுள்ளார்.
இவரது பண்ணையில் விளையும் இயற்கை விளை பொருட்களைப் பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் ராமநாதபுரம் நகரில் விற்பனை மையங்கள் அமைத்துள்ளார். இப்பண்ணை பற்றிய அறிய அவ்வப்போது வேளாண் கல்லூாி மாணவர்கள், வேளாண் ஆராய்ச்சி மாணவர்கள், வேளாண் விஞ்ஞானிகள் வந்து செல்கின்றனர்.
பண்ணையில் இயற்கை உரம் பயன்படுத்தப்படுகிறது. பண்ணை முழுவதும் 7 குளங்களை அமைத்து ஆண்டு முழுவதும் மழை நீர் சேமிக்கிறார். இந்த நீரை பயிர்களுக்கு பயன்படுத்துகின்றனர்.
பாரம்பரிய நெல்
தமிழகத்தின் பாரம்பரிய நெல் வகைகளான அறுபதாங்குறுவை, கருத்தக்கார், பூங்கார், சித்திரைக்கார், மாப்பிள்ளைச் சம்பா, கிச்சடிச் சம்பா, ஆத்தூர் கிச்சடிச் சம்பா ஆகிய நெல் வகைகளை இங்கு பயிரிட்டுள்ளார். அதன் அறுவடை முடிந்துள்ளது. அதையடுத்து 65 நாட்களில் மகசூல் தரக்கூடிய அறுபதாங்குறுவை நெல்லை இரண்டாம் போகமாக 3 ஏக்கரில் பயிரிட்டுள்ளார். தற்போதுள்ள உயர் ரக நெல்கள் மகசூல் தர 160 முதல் 180 நாட்கள் பிடிக்கும்.
இந்நெல் குறைந்த நீரில் குறுகிய நாட்களில் மகசூல் தரக்கூடியது. பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுக்கவும், விவசாயிகளுக்கும், மக்களுக்கும் கொண்டு செல்லவும் இந்நெல் வகைகள் பயிரிடப்பட்டு வருகிறது. அறுபதாங்குறுவை அரிசியை சாப்பிட்டால் பெண்களுக்கு கர்ப்பப்பை கோளாறுகள் வராது என்றும், இயற்கை பிரசவம் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.
இது குறித்து விவசாயி தரணி முருகேசன் கூறியதாவது:
வறண்ட நிலம், களிமண், உப்புத் தண்ணீர் உள்ள இடத்தில் இயற்கை விவசாயப் பண்ணையை உருவாக்கி இருக்கிறேன். இங்குள்ள 60 ஏக்கரில் 20 ஏக்கரில் அடர்ந்த வேளாண் காடுகளும், 20 ஏக்கரில் குளங்கள், கால்நடைகள், கோழிப்பண்ணைகள் அமைத்துள்ளேன். மீதி 20 ஏக்கரில் விவசாயம் நடைபெறுகிறது.
ஒருங்கிணைந்த பண்ணையத்தை இங்கு ஏற்படுத்தி இருக்கிறேன். இங்கு தற்சார்பு பொருளாதாரத்தை உருவாக்கி, இயற்கையை சேதப்படுத்தாமல் புணர்வுதாரணம் செய்யப்படுகிறது, மண்ணும், செடி, கொடிகளும், கால்நடைகளும், மனிதர்களும் புத்துயிர் பெறுகின்றன. குறைந்த செலவில் இங்கு கிடைக்கும் இயற்கை பொருட்களை கால்நடைகளுக்கு உணவாகக் கொடுத்து, கால்நடை கழிவுகளைப் பயிர்களுக்கு கொடுத்து, பயிர்கள் மூலம் மனிதர்களுக்கு உணவாகக் கிடைக்கிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT