Published : 25 Apr 2021 06:10 AM
Last Updated : 25 Apr 2021 06:10 AM
திருநெல்வேலி/ தென்காசி/ தூத்துக்குடி
திருநெல்வேலி மாவட்டத்தில் முழுஊரடங்கை முன்னிட்டு 2,500 போலீஸாரும், தென்காசி மாவட்டத்தில் 800 போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் முழுஊரடங்கையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இறைச்சி கடைகள், மீன் சந்தை, காய்கறி கடைகள், டாஸ்மாக் கடைகள், வணிக வளாகங்கள் எதுவும் செயல்படாது. திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும். திருநெல்வேலியில் நயினார்குளம் மொத்த மார்க்கெட், பாளையங்கோட்டை மார்க்கெட் செயல்படாது. பால், பத்திரிகை விநியோகம், மருத்துவ சேவைகளுக்கு தடையில்லை.
திருநெல்வேலி மாநகரப் பகுதியில் 1000 போலீஸாரும், மாவட்டத்தில் 1,500 போலீஸாரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகிறார்கள். கங்கைகொண்டான், காவல்கிணறு, உவரி,திசையன்விளை, வன்னிக்கோனேந்தல், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து போலீஸார் கண்காணிக்க உள்ளனர்.
தென்காசி
முழு ஊரடங்கு நாளில் தேவையின்றி யாரும் வெளியில் திரிய வேண்டாம். விதிமுறைகளை மீறியாராவது கடைகளை திறந்திருந்தால் இரட்டிப்பு அபராதம் விதிக்கப்படுவதுடன், சட்டபூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படும். அரசின் அறிவிப்புக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்றார். திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் முன்னரே முடிவு செய்யப்பட்டிருந்தால் அதற்கான அழைப்பிதழைக் காட்டிச் செல்லலாம் என்று அதிகாரிகள் கூறினர்.
தூத்துக்குடி
இன்று முழு ஊரடங்கு தொடர்பாக தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.முகாமில் அவர் பேசியதாவது:
இன்று (24-ம் தேதி) இரவு 10 மணி முதல் நாளை மறுநாள் (26-ம் தேதி) அதிகாலை 4 மணி வரை30 மணி நேரம் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில் உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.
ஞாயிற்றுக் கிழமைகளில் இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி கடைகள், திரையங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் அனைத்து கடைகளும் செயல்பட அனுமதிக்கப்படமாட்டாது. கரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுரகுடிநீர் எடுத்துகொள்ள வேண்டும், என்றார்.
தொடர்ந்து அவர், பொது மக்களுக்கு இலவச முகக்கவசம், தர்பூசணி பழம் மற்றும் கபசுரகுடிநீர் வழங்கினார். தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ்,மத்தியபாகம் காவல் ஆய்வாளர் வின்சென்ட் அன்பரசி, போக்குவரத்து காவல் ஆய்வாளர் செந்தில் சுரேஷ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT