Published : 21 Apr 2021 03:16 AM
Last Updated : 21 Apr 2021 03:16 AM
பட்டாசு வெடி விபத்தில் பலியோனோர் குடும்பத்துக்கு ஆலை நிர்வாகம் வழங்கிய காசோலைகள் பணம் இன்றி திரும்பின, மேலும் மத்திய, மாநில அரசுகளின் நிவாரணத் தொகையும் வழங்காததால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வேதனை அடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் சந்தனமாரி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் பிப். 12-ம் தேதி ஏற்பட்ட வெடிவிபத்தில் 27 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
பலியோனோரின் குடும்பத்தினருக்கு இழப்பீடுத் தொகையாக தமிழக அரசு சார்பில் ரூ.3 லட்சமும், மத்திய அரசு சார்பில் ரூ.2 லட்சமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுதவிர, பட்டாசு ஆலை நிர்வாகம் சார்பில் உயிரிழந்த 27 பேரின் குடும்பங்களுக்கு இழப்பீடாக ரூ.5 லட்சம் காசோலையாக வழங்கப்பட்டது. ஆனால், 27 பேரில் 2 பேருக்கு மட்டுமே பணம் இருந்தது. மற்ற 25 பேருக்கு வழங்கப்பட்ட காசோலைகள் வங்கியில் பணம் இன்றி திரும்பின. மேலும், மத்திய, மாநில அரசுகள் அறிவித்த நிவாரணத் தொகையும் இதுவரை வழங்கப்படவில்லை.
இதையடுத்து வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினர் நிவாரணத் தொகை வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இது குறித்து பதிக்கப்பட்டோர் கூறுகையில், பட்டாசு ஆலை வெடிவிபத்தில் எங்களது குடும்பத்தினரைப் பலி கொடுத்துவிட்டோம். அவர்களது இழப்பு எங்களுக்கு ஈடுசெய்ய முடியாதது. ஆனாலும், மத்திய, மாநில அரசுகள் அறிவித்த நிவாரணத் தொகை இதுவரை எங்களுக்குக் கிடைக்கவில்லை. ஆலை நிர்வாகம் வழங்கிய 25 பேரின் காசோலையும் பணம் இன்றித் திரும்பின. மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
இதற்கிடையே, ஆட்சியர் அலுவலகம் வந்த சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன், பாதிக்கப்பட்டோரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். அதோடு, மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்து பேசியதோடு இழப்பீடு கிடைக்க முயற்சி எடுப்பதாகவும் கூறிச் சென்றார்.
மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் கூறுகையில், நிவாரணம் வழங்காதது எனது கவனத்துக்கு வரவில்லை. தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த பின் இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT