Published : 20 Apr 2021 03:15 AM
Last Updated : 20 Apr 2021 03:15 AM
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாநில எல்லையோரக் கிராமங்களில் அறுவடை முடிந்த நிலங்களில் இயற்கை உரத்துக்காக மேய்ச்சலுக்கு ஆடுகள் விடப்படுவதால், சேகரமாகும் கழிவுகள் மூலம் அடுத்த பயிரில் மகசூல் அதிகரிக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்று நீர்ப்பாசனம் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் நெல் சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல், ராகி, சோளம், தினை, வரகு, சாமை, உளுந்து, பச்சைப்பயறு உள்ளிட்ட சிறுதானிய உணவு பொருட்களும் விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர்.
தற்போது நெல் உள்ளிட்டவை அறுவடை பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது. அவ்வாறு அறுவடை செய்யப்பட்ட நிலங்களை சீர் செய்யும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆந்திரா, கர்நாடக மாநில எல்லைகளில் உள்ள விவசாயிகள் அறுவடை செய்யப்பட்ட தங்கள் நிலங்களில், உரமேற்ற கால்நடைகள் வளர்ப்பவர்களை வரவேற்று ஆடு பட்டிகள் போட்டுள்ளனர். வயல்களில் போடப்பட்டுள்ள பட்டிகளில் உள்ள ஆடுகள், வயல்கள், வரப்புகளில் கிடைக்கும், வைக்கோல்கள் பச்சை புல் பூண்டுகளை மேய்ந்து வருகின்றன.
இதுதொடர்பாக விவசாயிகள் சிலர் கூறும்போது, ஆடுகளின் கழிவுகள் வயலுக்கு சிறந்த இயற்கை உரமாக பயன்படுகிறது. ஆட்டின் கழிவு சிறந்த இயற்கை உரம் என்பதால் இப்பகுதி விவசாயிகள் தங்கள் நிலங்களில் இரவு நேரங்களில் பட்டிப் போட்டு ஆடுகளை அடைத்துக் கொள்ள அனுமதி அளிப்பதுடன் ஆடு மேய்யப்பவர்களுக்கு தேவையான உணவு, தங்கும் இடம் உள்ளிட்ட தேவையான வசதிகளை செய்து தருகின்றனர். கடந்த காலங்களில் அதிகளவில் ஆடுகளை இதுபோன்று மேய்ச்சலுக்கு அழைத்து வந்தனர். தற்போது குறைந்த அளவில் கால்நடை வளர்ப்பவர்கள் ஆடுகளை மேயச்சலுக்கு அழைத்து வருகின்றனர். ஆடுகள் மூலம் கிடைக்கும் இயற்கை உரத்தால், அடுத்த பயிரில் மகசூல் அதிகரிக்கும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT