Published : 17 Apr 2021 03:16 AM
Last Updated : 17 Apr 2021 03:16 AM
மேகேதாட்டு அணை குறித்து விவாதிக்க தமிழகத்தில் அனைத் துக் கட்சிக் கூட்டத்தை தலைமைச் செயலாளர் கூட்டவேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள அறிக்கை: கர்நாடக அரசு தனது பட்ஜெட்டில் ரூ.9 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து, காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட தொடங்கி உள்ளதாக அம் மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து தமிழக காவிரி விவசாயிகள் சங்க விவசாயிகள் 300-க்கும் மேற்பட்டோர் சத்தியமங்கலம் வழியாக மேகேதாட்டு பகுதியில் முற்றுகையிடு வதற்கு சென்றபோது, மார்ச் 28-ல் தமிழக காவல்துறை எங்களை தடுத்து நிறுத்தி கைது செய்தது. இந்நிலையில், எனது தலைமையில் 7 பேர் கொண்ட குழு ஏப்.12-ம் தேதி கர்நாடக மாநிலம் மேகேதாட்டு பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தது. அப்போது, அங்கு அணை கட்டுவதற்கு கருங்கற்கள், மணல் கொட்டப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளது தெரிய வந்தது. இதுகுறித்து பத்திரிகைகளில் செய்தி வெளியாகி இருந்தது.
இதுதொடர்பாக காவிரி கண்காணிப்புக் குழு தலைமைப் பொறியாளர் நவீன்குமார் தொலைபேசி மூலம் என்னிடம் கேட்டறிந்தார். பிறகு இதுகுறித்து ஒரு கடிதத்தை அனுப்பி வைக்கவும் கோரினார். அதன்படி. அவருக்கு உடனடியாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கர்நாடகம் மேகேதாட்டுவில் அணை கட்டினால், தமிழகத்தில் 25 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் அழிவதோடு,சென்னை உட்பட 11 மாநகராட்சிகளை உள்ளடக்கிய 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரம் பறிபோகும். தமிழகத்தின் உணவு உற்பத்தி 40 சதவீதம் அழிந்துவிடும். மேகேதாட்டுவில் அணை கட்டினால் தமிழகம் அழிந்து போகும் என்பதை உணர்ந்து, அதை தடுத்து நிறுத்து வதற்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக தலைமைச் செயலாளர் உடனே கூட்டி, விவாதிக்க முன்வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT