Published : 15 Apr 2021 03:11 AM
Last Updated : 15 Apr 2021 03:11 AM
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரப் பகுதியில் ஆக்கிரமிப்புகளுக்குள்ளாகி உள்ள கமிஷன் வாய்க்காலை மீட்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னார்குடி நகரத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக கடந்த 1870-1872-ம் ஆண்டுகளில் வடுவூர் வடவாற்றிலிருந்து மன்னார்குடிக்கு 120 அடி அகலத்துக்கு புதிதாக வாய்க்கால் வெட்டப்பட்டு, கமிஷன் வாய்க்கால் என பெயரிடப்பட்டது.
பின்னர், மேட்டூர் அணை கட்டப்பட்டு வடவாறு விரிவாக்க கால்வாய் பாசனம் உருவாக்கப்பட்டதால், மன்னார்குடி நகரத்திலுள்ள குளங்களுக்கு வடவாறு விரிவாக்க கால்வாய் மூலம் தண்ணீர் பாய்ச்சப்பட்டது. இதனால் கமிஷன் வாய்க்கால் பயனற்றுப் போய்விட்டது. இந்நிலையில், கமிஷன் வாய்க்கால் ஆங்காங்கே ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியது. ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு, மீண்டும் இந்த வாய்க்காலை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என மன்னார்குடி நகர மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில், காரிக்கோட்டை பகுதியில் கமிஷன் வாய்க்காலில் 10 ஏக்கர் பரப்பளவிலான நிலம் தனியார் பண்ணையின் ஆக்கிரமிப்பில் இருந்தது. அதை காரிக்கோட்டை கிராம மக்கள் மீட்டதுடன், தங்கள் கிராமத்துக்கு அந்த நிலத்தை பயன்படுத்திக்கொள்ள மன்னார்குடி நகராட்சியிடம் கடந்தாண்டு அனுமதி கேட்டனர். இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில், தனியார் நபர் அந்த நிலத்தை தற்போது ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகிறார்.
இதுகுறித்து மன்னார்குடி நகராட்சி ஆணையர், மன்னார்குடி காவல் நிலையத்தில் கடந்த மாதம் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ராஜேந்திரன் கூறியது: மன்னார்குடி நகர மக்களின் குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்ட கமிஷன் வாய்க்கால் ஆங்காங்கே ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருகிறது. இதை தற்போது தடுக்கவில்லை என்றால், வாய்க்கால் முழுமையாக ஆக்கிரமிப்புக்குள்ளாகிவிடும்.
ஆட்சியர் நேரடியாக தலையிட்டு, ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வரும் கமிஷன் வாய்க்காலை மீட்க வேண்டும். தொடர்ந்து இந்த வாய்க்காலை புனரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவருவது குறித்து தனியாக ஒரு குழு அமைக்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT