Published : 12 Apr 2021 03:20 AM
Last Updated : 12 Apr 2021 03:20 AM
கரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளதால் தென்காசியில் மீண்டும் சித்தா சிகிச்சை மையத்தை தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கடந்த ஆண்டு பரவத் தொடங்கிய கரோனா வேகமெடுத்து, படிப்படியாகக் குறைந்த நிலையில், கடந்த சில நாட்களாக இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கரோனா தொற்று கடந்த ஆண்டு அதிகரித்தபோது தென்காசி மாவட்டம், கொடிக்குறிச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் ஆட்சி யர் உத்தரவின்பேரில் கரோனா சிகிச்சைக்கு சித்தா கோவிட் கேர் சென்டர் திறக்கப்பட்டது.
உணவே மருந்து
‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்ற அடிப்படையில் உணவுகள் வழங்கப்பட்டன. உளுந்து சாதம், எள் துவையல், பருப்பு சாதம், கொத்தமல்லி துவையல், பிரண்டை துவையல், இஞ்சி துவையல், முருங்கைக் கீரை அடை, தூதுவளை கீரை அடை, மிளகு பொங்கல், மாப்பிளை சம்பா அரிசி சாதம், முட்டை, இட்லி, தினை லட்டு, ராகி தோசை, நவதானிய தோசை, கோதுமை தோசை, சம்பா புட்டு, சாம்பார், காய்கறி பொரியல், கூட்டு, சுண்டைவற்றல் குழம்பு, திப்பிலி ரசம், மிளகு ரசம், இஞ்சி ரசம், மிளகரனை ரசம், முடற்கற்றான் கீரை ரசம், வரகரிசி பொங்கல் போன்ற உணவுகள் வழங்கப்பட்டன.நெல்லிக்காய் ஜூஸ், கேரட் ஜூஸ், மாதுளம் ஜூஸ், வாழைப் பழம், கோல்டன் மில்க் (மிளகு, மஞ்சள்தூள், நாட்டு சர்க்கரை கலந்த பால்), போன்றவையும் வழங்கப்பட்டன.
அமுக்கரா மாத்திரை, அதி மதுர மாத்திரை, பிரமானந்த பைரவம் மாத்திரை, தாளிசாதி கேப்சூல், ஆடாதோடை மணப்பாகு, ஆகிய மருந்துகள் நோயாளிகளின் உடல்நிலையை பரிசோதித்து தேவைக்கேற்ப வழங்கப்பட்டது. இந்த சித்தா கோவிட் சிகிச்சை மையத்தில் கரோனா நோயாளிகளுக்கு மூன்று வேளையும் கபசுரக் குடிநீர், மூலிகை தேநீர், நொச்சி குடிநீர் வழங்கப்பட்டது. கரோனா நோயாளிகளுக்கு தேவையான உணவு கோவிட் கேர் மையத்திலேயே சமைத்து வழங்கப்பட்டது.
1,500 பேருக்கு சிகிச்சை
ரத்த பரிசோதனை, வாரம் ஒருமுறை நுண்கதிர் படம் எடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தினமும் உடல் வெப்ப நிலை, நாடித் துடிப்பு, ரத்த அழுத்தம் ஆய்வு செய்யப்பட்டு, சித்த மருத்துவக் குழு சிகிச்சை அளித்தது. இந்த மையத்தில், சுமார் 1,500 பேர் சிகிச்சை பெற்றனர். இங்கு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டவர்கள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பினர் என்று சிகிச்சை அளித்த சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.தற்போது கரோனா பரவல் வேகமெடுத்துள்ளதால் தென்காசி பகுதியில் மீண்டும் சித்தா கோவிட் கேர் சென்டர் அமைத்து, சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து சித்தா கோவிட் கேர் சென்டர் மருத்துவர் ஒருவர் கூறும்போது, “கடந்த ஆண்டு கரோனா தொற்று அதிகரித்த பின்னர் தான் சித்தா கேர் சென்டர் அமைக்கப்பட்டது. இங்கு நல்ல முறையில் சிகிச்சை அளித்ததால் நோயாளிகள் விரைவில் குணமடைந்தனர். கரோனா பரவல் குறைந்ததையடுத்து சித்தா கோவிட் கேர் சென்டர் மூடப்பட்டது.
மீண்டும் தொடங்க வேண்டும்
தற்போது மீண்டும் கரோனா பரவல் அதிகரித்துள்ளதால் சித்தா கேர் சென்டரை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். மாவட்ட நிர்வாகம் இதற்கு நடவடிக்கை எடுத்தால் மருத்துவர்கள் குழு முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளது” என்றார்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT