Published : 07 Apr 2021 03:17 AM
Last Updated : 07 Apr 2021 03:17 AM
ஈரோடு மாவட்ட கிராமப் பகுதிகளில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படாததால், வாக்காளர்கள் அவதிக்குள்ளாகினர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அமைக்கப்பட்டு இருந்த 2741 வாக்குச் சாவடிகளில் நேற்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவிற்கு ஒரு நாளைக்கு முன்பாகவே அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் கதிரவன் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட 46 புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த 5 வாக்குச்சாவடிகளில் எவ்வித முன்னேற்பாடும் செய்யப்படவில்லை. வாக்குப்பதிவு தொடங்கிய 1 மணி நேரத்திற்கு பிறகு தான், ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனால் வாக்காளர்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த வாக்குச்சாவடி உள்பட மொடக்குறிச்சி, பெருந்துறை தொகுதிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் அமைக்கப்பட்டு இருந்த பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் குடிநீர் வசதி, ஷாமியானா வசதி செய்து தரப்படாததால் வாக்காளர்கள் அவதிக்குள்ளாகினர். ஈரோடு மேற்கு தொகுதிக்குட்பட்ட புங்கம்பாடியில் கிராம நிர்வாக அலுவலகத்தை வாக்குச்சாவடியாக அதிகாரிகள் மாற்றியதால் அங்கு கடும் இட நெருக்கடி ஏற்பட்டது.
சென்னிமலை ஒன்றியம் புத்தூர் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு சூறாவளிக் காற்றுடன், லேசான மழை பெய்தது. இதில் மரக்கிளைகள் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்ததில், புத்தூர் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி அருகே இருந்த 2 மின் கம்பங்கள் அடியோடு சாய்ந்து விழுந்தன. இதையடுத்து இரவு முழுவதும் ஜெனரேட்டர் பயன்படுத்தி வாக்குச்சாவடிக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. பின்னர் பகலில் அருகில் உள்ள ஒரு மின்கம்பத்தில் இருந்து இணைப்பு எடுத்து மின்விநியோகம் செய்யப்பட்டது.
முதியோர் ஆர்வம்
ஈரோடு மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 50 ஆயிரத்து 62 பேரும், மாற்றுத்திறனாளிகள் 14,597 பேரும் உள்ளனர். இவர்களில் 5176 பேர் மட்டும் தபால் வாக்களித்தனர். மீதமுள்ள மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவியாளர், உறவினர் துணையுடன் ஆர்வத்துடன் வாக்களித்தனர். அதேபோல், முதன்முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.அனைவரும் கட்டாயம் வாக்களிக்கும் வகையில், அனைத்து கடை, நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்ததால், ஈரோடு நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. உணவகங்கள் மூடப்பட்டு இருந்ததால், தேர்தல் பணியில் ஈடுபட்டோர் உள்ளிட்டோர் உணவு கிடைக்காமல் அவதிக்குள்ளாகினர். பேருந்துகளிலும் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT