Published : 05 Apr 2021 03:15 AM
Last Updated : 05 Apr 2021 03:15 AM
காஞ்சிபுரம், உத்திரமேரூர், மதுராந்தகம் தொகுதிகளில் வேட்பாளர்கள் நேற்று தீவிர பிரச்சாரம் செய்து மாலையில் நிறைவு செய்து கொண்டனர்.
காஞ்சிபுரம் திமுக வேட்பாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் தனது பிரச்சாரத்தை செங்கழுநீரோடை பகுதியில் தொடங்கினார். அங்கிருந்து பூக்கடை சத்திரம் கிழக்கு ராஜவீதி, நெல்லுக்காரத் தெரு, காமராஜர் வீதி ஆகிய பகுதிகள் வழியாக நகரின் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து வணிகர் வீதியில் தங்கள் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டார். இந்த ஊர்வலத்தில் திமுக கூட்டணிக் கட்சிகளும் பங்கேற்றன.
பாமக வேட்பாளர் மகேஷ்குமார் காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் கிருஷ்ணன் தெரு, தாயார் அம்மன் குளம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். இவருக்கு ஆதரவாக உத்திரமேரூர் எம்எல்ஏ வி.சோமசுந்தரம், முன்னாள் எம்எல்ஏ வாலாஜாபாத் பா.கணேசன் ஆகியோரும் வாக்கு சேகரித்தனர். இவர்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் செய்து பின்னர் ஊர்வலமாகச் சென்று தேரடி பகுதியில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டனர். இதில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
அமமுக வேட்பாளர் மனோகரன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கோபிநாத், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சால்டின் உள்ளிட்ட சுயேச்சை வேட்பாளர்களும் தங்கள் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டனர். கடைசி நாள் பிரச்சாரத்தால் காஞ்சிபுரம் நகரம் பரபரப்பாக காணப்பட்டது.
உத்திரமேரூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தற்போதைய எம்எல்ஏ க.சுந்தர் உத்திரமேரூர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரமும் அதே பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இவரும் பேருந்து நிலையம் அருகே பிரச்சாரத்தை முடித்துக் கொள்ள திட்டமிட்டிருந்தனர். இருவரும் ஒரே இடத்தில் பிரச்சாரம் என்பதால் போலீஸார் திமுகவினரை முன் கூட்டியே பிரச்சாரத்தை முடிக்கும்படி கூறி இருந்தனர். ஆனால் அதிமுக, திமுக கூட்டணிக் கட்சியினர் பிரச்சாரம் முடியும் நேரத்தில் ஒரே இடத்தில் சந்தித்துக் கொண்டனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் பேருந்து நிலையம் அருகிலேயே வெவ்வேறு பகுதியில் இரு வேட்பாளர்களும் தங்களது பிரச்சாரத்தை முடித்துக் கொண்டனர்.
அமமுக வேட்பாளர் ரஞ்சித்குமார் முத்தியால்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பிரச்சாரத்தை ஈடுப்டடார். இவர் முத்தியால்பேட்டை ஊராட்சிக்கு உள்பட்ட வள்ளுவப்பாக்கம் பகுதியில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டார். சமத்துவ மக்கள் கட்சியைச் சேர்ந்த சூசையப்பர், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த காமாட்சி உள்ளிட்டோரும் பிரச்சாரத்தை நேற்று நிறைவு செய்தனர்.
மதுராந்தகம் தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிடும் மல்லை சத்யா ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி பல்வேறு தேவாலயங்களுக்குச் சென்று அங்கு பிரார்த்தனைக்கு வந்த பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். பின்னர் மாலையில் பேருந்து நிலையம் அருகே இருந்து பஜார் வீதியில் ஊர்வலமாக வந்தார். பின்னர் தேரடி பகுதியில் தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்டார். திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.
அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் மதுராந்தகம் நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பின்னர் மாலையில் மதுராந்தகம் ஏரிக்காத்த ராமர் கோயிலில் இருந்து ஊர்வலமாக வந்து தேரடி அருகே பிரச்சாரத்தை முடித்துக் கொண்டார். கூட்டணிக் கட்சியினரும் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
தேமுதிக மூர்த்தி, மக்கள் நீதி மய்யம் தினேஷ், நாம் தமிழர் கட்சி சுமிதா மற்றும் சுயேச்சை வேட்பாளர்களும் பிரச்சாரத்தை நிறைவு செய்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT