Published : 31 Mar 2021 03:15 AM
Last Updated : 31 Mar 2021 03:15 AM

அதிமுக அரசிடம் இருந்து தமிழகத்தை மக்கள் மீட்க வேண்டும் : திருப்பூர் பிரச்சாரத்தில் பிரகாஷ் காரத் வேண்டுகோள்

கோவை/திருப்பூர்

அதிமுக அரசிடம் இருந்து தமிழகத்தையும், தமிழக மக்களையும் மீட்க வேண்டும் என, திருப்பூர் பிரச்சாரத்தில் பிரகாஷ்காரத் வலியுறுத் தினார்.

திமுக கூட்டணி சார்பில் திருப்பூர் வடக்கு தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ரவி (எ) சுப்பிரமணியத்தை ஆதரித்து, திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் நேற்றிரவு நடந்த பொதுக் கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் பேசியதாவது:

அதிமுக அரசிடம் இருந்து, தமிழகத்தையும், தமிழக மக்களையும் மீட்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. கடந்த ஓராண்டு காலத்தில் கரோனா தொற்று காரணமாக, ஒரு லட்சத்து 62,000 பேர் இறந்திருக்கிறார்கள். கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இந்த காலத்தில்கூட மத்திய அரசு கொஞ்சம்கூட யோசிக்காமல், மக்களை பாதிக்கக்கூடிய சட்டங்களை இயற்றி வருகிறது. விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களுக்கு அதிமுகவினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசுக்கு, தமிழக அரசு கீழ்பணிந்து செல்வது, தமிழகத்துக்கு பெரும் ஆபத்தாக முடிந்துவிடும். தமிழகத்துக்குள் பாஜக நுழைந்துவிட்டால், தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவை அழிக்கப்படும். அதிமுக- பாஜக கூட்டணியை இந்த தேர்தலில் நாம் தோற்கடிக்க வேண்டும். அதிமுகவுக்கு அளிக்கும் வாக்கு, பாஜகவுக்கு செலுத்தும் வாக்குதான். தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் மதச்சார்பின்மையை காக்க திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதேபோல தாராபுரத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி திமுக வேட்பாளர் கயல்விழி செல்வராஜை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் பேசியபோது ‘‘சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும், நமது நாட்டில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தாறுமாறாக ஏறிக் கொண்டே உள்ளது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் வரிமேல் வரிபோட்டு செயற்கையாக விலையை உயர்த்தி வருவதே காரணம். தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு, மக்கள் நலனை பாதுகாக்க தவறிவிட்டது. மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வுகாண மத்திய அரசும், மாநில அரசும் தவறிவிட்டன. மக்களிடையே வெறுப்பு அரசியல் வளர்க்கப்படுகிறது. இத்தேர்தலில் பாஜக, அதிமுக கூட்டணிக்கு தக்க பதிலடி தரவேண்டும்’’ என்றார்.

கோவை கணபதியில் நேற்றிரவு தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் பேசும்போது, ‘‘இத்தேர்தல் தமிழகத்துக்கு முக்கியத் தேர்தல் ஆகும். தமிழக மக்களின் நலன்களை காக்கக் கூடிய சுயேச்சை அரசாக அமைய வேண்டுமா அல்லது டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திரமோடி, பாஜக , ஆர்.எஸ்.எஸ் அவர்களது கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய அடிமை அரசு வர வேண்டுமா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும்.

கரோனா காலத்திலும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பொது முடக்கக் காலத்திலும் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். கோடிக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது வேலை வாய்ப்பை பறிகொடுத்துள்ளனர். தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் மீது, நரேந்திர மோடி அரசு ஒன்றன் பின் ஒன்றாக சுமைகளை ஏற்றியது. எதிர்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தனர். இதற்கு அதிமுக எம்.பி.க்கள் உறுதுணையாக இருந்தனர். விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எதிராக செயல்படக் கூடியது தான் அதிமுக அரசு.

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் கோவை வடக்கு தொகுதி திமுக வேட்பாளர் வ.ம.சண்முகசுந்தரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி, பி.ஆர்.நடராஜன் எம்.பி, கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் மயூரா ஜெயக்குமார், மதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x