Published : 29 Mar 2021 03:17 AM
Last Updated : 29 Mar 2021 03:17 AM

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு - தென் மாவட்ட சாஸ்தா கோயில்களில் சிறப்பு வழிபாடு :

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தென் மாவட்டங்களில் உள்ள சாஸ்தா கோயில்களில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டம் பிராஞ்சேரியில் உள்ள வீரிய பெருமாள் சாஸ்தா, கரையடிமாடசுவாமி கோயிலில் பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். (அடுத்தபடம்) தகிக்கும் வெப்பத்தால் ஏற்பட்ட பயண களைப்பு நீங்க கோயில் வளாகத்தில் உள்ள மர நிழலில் குடும்பத்துடன் அமர்ந்திருந்த பக்தர்கள்.படங்கள் மு. லெட்சுமி அருண்.

திருநெல்வேலி/ தூத்துக்குடி/நாகர்கோவில்

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள சாஸ்தா கோயில்களில் நேற்று திரளான பக்தர்கள் கூடி வழிபாடு நடத்தினர்.

இந்துக்களின் வழிபாடுகளில் சாஸ்தா வழிபாடு முக்கியமானதாகும். ஆண்டு தோறும் பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திர தினத்தில் சாஸ்தா கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். தென் மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் இந்நாளில் தங்கள் குல தெய்வமான சாஸ்தா கோயில்களுக்கு குடும்பத்தோடு வந்து பொங்கலிட்டு, நேர்த்திக் கடன் செலுத்தி வழிபடுவார்கள்.

நடப்பாண்டு பங்குனி உத்திர தினமான நேற்று திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள அனைத்து சாஸ்தா கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம் காரையாறு சொரிமுத்தை யனார் கோயில், பிராஞ்சேரி கரையடி மாடசுவாமி, வீரியபெருமாள் சாஸ்தா, சேரன்மகாதேவி செங்கோடி சாஸ்தா, சிதம்பர சாஸ்தா, மலையன்குளம் பாடகலிங்க சாஸ்தா , வீரவநல்லூர் கல்லடி சாஸ்தா வனமூர்த்தி அய்யனார் கோயில், மறுகால்தலை பூலுடையார் சாஸ்தா, சிறுமளஞ்சி பெருவுடையார் சாஸ்தா, சாந்திநகர் நடுக்காவுடையார் சாஸ்தா, மேலநத்தம் ஆனையப்ப சாஸ்தா, தென்காசி குளத்தூரய்யன் சாஸ்தா, கடையம் சூட்சமுடையார் சாஸ்தா, குமரி மாவட்டம் ஆஸ்ரமத்தில் உள்ள அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தா, தெரிசனம்கோப்பு அரசரடி கண்டன் சாஸ்தா, அழகியபாண்டியபுரம் பூ சாஸ்தா, தக்கலை குண்டல சாஸ்தா, திருவட்டாறு கோட்டவிளை சாஸ்தா, தோவாளை ஓரானை கண்டன் சாஸ்தா, பூதப்பாண்டி கருமேனி கண்டன் சாஸ்தா, குமாரபுரம் பூமாலை சாஸ்தா உள்ளிட்ட சாஸ்தா கோயில்களில் சிறப்பு பூஜைகளுடன் வழிபாடுகள் நடைபெற்றன.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற சுந்தரபாண்டிய சாஸ்தா கோயிலில் நேற்று அதிகாலை சுந்தரபாண்டிய சாஸ்தா மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது.

இதுபோல் அம்மன்புரம் அருகேயுள்ள அருஞ்சுனை காத்த அய்யனார், தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயில், திருச்செந்தூர் குன்று மேலய்யன் சாஸ்தா, ஆழிக்குடி பொய் சொல்லா மெய்யன் சாஸ்தா, அனவரதநல்லூர் தென்னம் பாண்டி சாஸ்தா, முத்தாலங்குறிச்சி பூந்தலைஉடையார் சாஸ்தா, விட்டிலாபுரம் இலங்காமணி சாஸ்தா, வைகுண்டம் பரியேறும் பெருமாள் சாஸ்தா, மணக்கரை புங்கமுடையார் சாஸ்தா, ஏரல் இருவப்பபுரம் பெரும்படை சாஸ்தா உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள சாஸ்தா கோயில்களில் திரளான பக்தர்கள் குடும்பத்தினருடன் குவிந்து பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். சாஸ்தா கோயில்களுக்கு செல்ல வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்களால் பேருந்துகளில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. அனைத்து சாஸ்தா கோயில்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x