Published : 23 Mar 2021 03:14 AM
Last Updated : 23 Mar 2021 03:14 AM
ராமநாதபுரம் அருகே பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்காவிட்டால் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
கழுகூரணி குரூப் மாயாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனர். அவர்கள் பருவம் தவறிய மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்தன; இதற்கு அரசு நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.8,000 அறிவித்தும் இதுவரை வழங்கப்படவில்லை. எனவே வெள்ள நிவாரணம் மற்றும் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
தேர்தல் காலத்தில் அதிகாரிகள் மனுக்களை வாங்காததால் புகார் பெட்டியில் விவசாயிகள் மனுக்களை போட்டனர்.
இதுகுறித்து மாயாபுரம் விவசாயி ரெத்தினம் கூறியதாவது,
மாயாபுரம், மாடக்கொட்டான், தில்லைநாயகபுரம், மேலக் கோட்டை, ரமலான்நகர் உள்ளிட்ட கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில், ஜனவரியில் பெய்த பருவம் தவறிய மழையால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. மழையால் பாதிக்கப்பட்ட நெற் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.8000 நிவாரணம் அறிவித்து அரசு வங்கிக்கணக்கில் வரவு வைத்தது.
ஆனால் எங்கள் கிராமத்தை மத்தியக்குழுவினர் பார்வையிட்டுச் சென்றும் நிவாரணம் தரவில்லை. மேலும் கழுகூரணி, சுற்று வட்டாரப் பகுதிகளில் நெல் பயிருக்கு 2019-2020-ம் ஆண்டு பயிர்க்காப்பீடு செய்திருந்தும் இழப்பீடு வழங் காமல் அலைக்கழிக்கின்றனர்.
தங்களுக்கு நிவாரணம் வழங்க வில்லையெனில் தேர்தலைப் புறக்கணிப்போம் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT