Published : 19 Mar 2021 03:16 AM
Last Updated : 19 Mar 2021 03:16 AM
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மனுத்தாக்கல் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவு பெறும் நிலையில், நாளை மனுக்கள் மீது பரிசீலனை மேற்கெள்ளப்பட வுள்ளது. மேலும், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் 29 வேட்பாளர்கள் நேற்று மனுத் தாக்கல் செய்தனர்.
தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கி இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவு பெறுகிறது. மனுத்தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் அதிகம் பேர் மனுத்தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக,திமுக, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி வேட்பாளர்கள் பெரும்பாலானவர்கள் ஏற்கெனவே மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் சிறு கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று மனுத்தாக்கல் செய்வார்கள் என கூறப்படுகிறது.
பெறப்பட்ட மனுக்கள் மீது நாளை பரிசீலனை செய்யப்பட வுள்ளது. வரும் 22-ம் தேதி மனுக்களை திரும்பப்பெற கடைசி நாள். அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
வேலூர் மாவட்டம்
வேலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம்வேட்பாளர் விக்ரம் சக்கரவர்த்தி, சுயேட்சை வேட்பாளர்களாக சக்கரபாணி, விஷ்ணு மோகன் மற்றும் திமுக சார்பில் பன்னீர்செல்வன் என மொத்தம் 4 பேர் மனுத்தாக்கல் செய்தனர். இதில், பன்னீர்செல்வன் திமுகவைச் சேர்ந்தவர் என்பதும் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் மனுத்தாக்கல் செய்து அவரது மனு கட்சியின் அங்கீகார கடிதம் இல்லாததால் தள்ளுபடி செய்யப் பட்டது குறிப்பிடத்தக்கது. சுய விளம்பரத்துக்காக திமுக சார்பில் அவர் மனுத்தாக்கல் செய்துள்ளார் என திமுக நிர்வாகிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.
அணைக்கட்டு சட்டப்பேரவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் ராஜசேகர், சுயேட்சை வேட்பாளர் சுரேஷ் குமார் என 2 பேர் நேற்று மனுத்தாக்கல் செய்தனர்.
கே.வி.குப்பம் (தனி) தொகுதியில் இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) வேட்பாளராக இளவரசன், சுயேட்சை வேட்பாளராக சுரேஷ் என 2 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதேபோல், குடியாத்தம் (தனி) தொகுதியில் இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) வேட்பாளராக வெண்ணிலா, மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய ஜனநாய கட்சி வேட்பாளராக ராஜன், சுயேட்சை வேட்பாளராக கண்ணதாசன் என மொத்தம் 3 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இதுவரை காட்பாடி தொகுதியில் 11 பேர், வேலூர் தொகுதியில் 13 பேர், அணைக்கட்டு தொகுதியில் 6 பேர், கே.வி.குப்பம் (தனி) தொகுதியில் 10 பேர், குடியாத்தம் (தனி) தொகுதியில் 9 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராணிப்பேட்டை மாவட்டம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் நேற்று 16 பேர் மனுத்தாக்கல் செய்தனர். அரக்கோணம் தொகுதியில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் கவுதம் சன்னா, முன்னாள் மத்திய இணை அமைச்சரும் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகனுடன் சென்று மனுத்தாக்கல் செய்தார். சுயேட்சை வேட்பாளர்களாக சி.எம்.கவுதமன், ஏ.கவுதமன், சி.மோகன், மணிகண்டன், மதன்ராஜ் என மொத்தம் 6 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.சோளிங்கர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர்கள் சேகர், மணி, பாலாஜி ஆகிய 3 பேர் மனுத்தாக்கல் செய்தனர். ராணிப்பேட்டை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஆதம்பாஷா மனுத்தாக்கல் செய்தார்.
ஆற்காடு தொகுதியில் பாமக வேட்பாளர் கே.எல்.இளவழக னுக்கு மாற்று வேட்பாளராக எம்.கே.முரளி, இந்திய தேசிய ஜனநாயக கட்சி வேட்பாளராக முனிவேல், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கதிரவன், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் கேசவன், திப்பு சுல்தான் கட்சி வேட்பாளர் முகமது கவுஸ் மற்றும் சுயேட்சை வேட்பாளர் சதீஷ்குமார் என மொத்தம் 6 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT