Published : 17 Mar 2021 03:15 AM
Last Updated : 17 Mar 2021 03:15 AM

வங்கி ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம் - கிருஷ்ணகிரியில் ரூ.200 கோடி பணப் பரிவர்த்தனை பாதிப்பு :

கிருஷ்ணகிரி / ஈரோடு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி பழையபேட்டை இந்தியன் வங்கி மண்டல அலுவலகம் முன்பு அனைத்து வங்கி தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 2-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடந்தது.வங்கி அதிகாரிகள் சங்க மண்டல செயலாளர்ரங்கநாதன் தலைமை வகித்தார். ஸ்டேட் வங்கி ஊழியர் சங்க துணைப் பொதுச் செயலாளர் சந்தோஷ், பொன் மகாராஜா, அசோக்குமார், இந்தியன் வங்கி ஊழியர் சங்க செயலாளர் ராஜேந்திரன், சந்துரு ஆகியோர்கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் காப்பீட்டு நிறுவனங்கள், தேசிய மய வங்கிகள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் முழக்கங்கள் எழுப்பினர். இந்திய வங்கி ஊழியர் சம்மேளன தலைவர் ஹரி ராவ் நிறைவுரை ஆற்றினார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுத்துறை வங்கிகளும், கிராம வங்கிகளும் 2 நாட்களாக இயங்கவில்லை. இதனால் ரூ.100 கோடி மதிப்புள்ள காசோலை வர்த்தகம் உட்பட சுமார் ரூ.200 கோடிக்கு பணப் பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டன.

ஏடிஎம் செயல்பாடு பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 217 தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால், ரூ.600 கோடி மதிப்பிலான பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு சொந்தமான 360 ஏ.டி.எம்.களில், கடந்த 12-ம் தேதி நிரப்பப்பட்ட பணம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் எடுக்கப்பட்டு விட்டதால், கடந்த இரு நாட்களாகவே பணம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பணம் இருந்த ஒரு சில ஏ.டி.எம் மையங்களின் முன்பு மக்கள் கூட்டம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பெரும்பாலான ஏடிஎம்களில் பணம் இல்லாததால், பொதுமக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x