Published : 13 Mar 2021 03:12 AM
Last Updated : 13 Mar 2021 03:12 AM
நீலகிரி மாவட்டம் உதகை சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் திட்டப் பணியாளர்களின் இருசக்கர வாகனப் பேரணி பிங்கர்போஸ்ட்டில் நடந்தது.
பின்னர், கடந்த தேர்தலின் போது குறைவான வாக்குப்பதிவுகள் பதிவான வாக்குச்சாவடி அருகில் உள்ள வாக்காளர்களிடையே நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தியும், வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காந்தல் முக்கோணம் பகுதியில் 14 மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் கோலப்போட்டி நடந்தது.
பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஜெ.இன்னசென்ட் திவ்யா, உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே நேரு யுவகேந்திரா மூலம் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டு, ஆட்டோக்களில் ‘கறை நல்லது’ என்ற விழிப்புணர்வு வில்லைகளை ஒட்டினார்.
பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் இப்பேருந்து நிலையப் பகுதியில் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டிருந்த கையெழுத்து இயக்கத்தில் ஆட்சியர் கையெழுத்திட்டார்.
மீடியா மையத்தில் ஆய்வு
தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக, செய்தித் தொலைக்காட்சிகள், உள்ளுர் தொலைக்காட்சிகள், தினசரி நாளிதழ்கள் மற்றும் வானொலி ஒலிபரப்பு ஆகியவற்றை கண்காணிப்பதற்காக உதகையில் அமைக்கப்பட்டுள்ள மீடியா மையத்தை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறும்போது, “தேர்தல் தொடர்பான புகார்களை 1800 425 0034 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். மீடியா மையத்தில் 9 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, 24 மணி நேரமும் 3 ஷிப்டுகளாக சுழற்சி முறையில் செய்திகள், விளம்பரங்கள் மற்றும் தேர்தல் தொடர்பான நடத்தை விதிமுறைகளை கண்காணித்து வருகின்றனர்” என்றார்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT