Published : 28 Feb 2021 03:18 AM
Last Updated : 28 Feb 2021 03:18 AM
தேர்தல் விதி மீறியதாக நீலகிரி மாவட்ட அதிமுக மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கூடலூரில் ரூ.3.60 லட்சம் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் பறிமுதல்செய்யப்பட்டன.
தமிழகத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே ஓணிக்கண்டி பகுதியில் நேற்று அதிமுக ஒன்றியச் செயலாளர் வசந்தராஜன் தலைமையிலான அதிமுகவினர், பொதுமக்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கிக்கொண்டிருந்தபோது திமுகவினர் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கூடலூரில் அதிமுக வர்த்தக அணி மாநில நிர்வாகி சஜீவன் என்பவருக்கு சொந்தமான குடோனில் பரிசுப்பொருட்கள் பதுக்கி வைத்துள்ளதாக திமுகநிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது. திமுக நகரச் செயலாளர் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் பாண்டியராஜன், பொதுக்குழு உறுப்பினர் அனீபா மற்றும் நிர்வாகிகள், வருவாய்த் துறையினருக்கு புகார் அளித்தனர்.
அங்கு சென்ற கூடலூர் கோட்டாட்சியர் ராஜ்குமார், வட்டாட்சியர் தினேஷ் குமார் மற்றும் வருவாய்த் துறையினர் ஆய்வு செய்து, ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள 2,250 சேலைகள் மற்றும் 3,500 பரிசுப் பைகளை பறிமுதல்செய்தனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்ஜெ.இன்னசென்ட் திவ்யா கூறும்போது, ‘‘தேர்தல் விதிமீறல் தொடர்பாக அதிமுக மீது உதகை, கூடலூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கூடலூரில் ரூ.3.60 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு கணக்கிடப்பட்டு வருகிறது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT