Published : 28 Feb 2021 03:18 AM
Last Updated : 28 Feb 2021 03:18 AM
திருமுருகன்பூண்டி திருமுருகநாதசாமி கோயிலில் ஒரே நாளில் நடைபெற்ற மூன்று தேரோட்டங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கொங்கு ஏழு சிவ ஸ்தலங்களில் முதன்மையானதும், மனநோய் தீர்க்கும் திருத்தலமாகவும் விளங்கும் திருமுருகன்பூண்டி திருமுருகநாதசாமி கோயிலில் கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தேர்த் திருவிழா தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள், சுவாமி திருவீதி உலா நடைபெற்றன. முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
அதிகாலையில் விநாயகர், திருமுருகநாதர், வள்ளி, தெய்வானை, பார்வதி, சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. கரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு மாலை 3 மணி அளவில் திருமுருகநாதர் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு தேரோட்டமும் நடைபெற்றது. இதையடுத்து, சண்முகநாதர் திருத்தேர், அம்மன் திருத்தேர் தேரோட்டம் ஆகிய மூன்று தேர்களும் ஒரேநாளில் நடைபெற்றது. ரத வீதிகள் வழியாகச் சென்று திருத்தேர் நிலையை அடைந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘அரோகரா’ முழக்கம் முழங்க திருத்தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
திருப்பூர் சிவனடியார்கள் திருக்கூட்டத்தாரின் கைலாய வாத்தியத்துடன் தேரோட்டம் நடந்தது. பேரூராட்சி நிர்வாகத்தினர் சார்பில் மின்விளக்குகள் பொருத்தி, குடிநீர் வசதியுடன் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. இன்று(பிப்.28) மாலை 3 மணிக்கு மீண்டும்தேரோட்டம் நடைபெற உள்ளது. பரிவேட்டை, குதிரை வாகனம், சிம்ம வாகனக் காட்சிகள், தெப்பத்தேர் உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மார்ச் 1-ம் தேதி இரவு சுந்தரர் வேடுபறி திருவிழா நடைபெறுகிறது. 2-ம் தேதி பிரம்மதாண்டவ தரிசனக் காட்சி, 3-ம் தேதி மஞ்சள் நீராடுதல், இரவில் மயில் வாகனக் காட்சியுடன் தேர்த் திருவிழா நிறைவு பெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT