Published : 28 Feb 2021 03:19 AM
Last Updated : 28 Feb 2021 03:19 AM
காரைக்கால்/ நாகப்பட்டினம்/ மயிலாடுதுறை
காரைக்கால் மாவட்டம் திருமலைராயன்பட்டினம் அருகே பட்டினச்சேரி கடற்கரையில், மாசி மகத்தையொட்டி பெருமாள்கள் தீர்த்தவாரி கண்டருளும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி, நாகை மாவட்டம் திருமருகல் அருகேயுள்ள திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள், பவழக்கால் சப்பரத்தில், தங்க கருட வாகனத்தில், சமுத்திர தீர்த்தவாரிக்காக பட்டினச்சேரி கடற்கரையில் எழுந்தருளினார்.
மேலும், திருமருகல் வரத ராஜப் பெருமாள், திருமலை ராயன்பட்டினம் வீழி வரதராஜப் பெருமாள், ரகுநாதப் பெருமாள், பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், நிரவி கரியமாணிக்கப் பெருமாள், காரைக்கால் நித்ய கல்யாணப் பெருமாள் ஆகிய சுவாமிகள் தனித்தனிப் பல்லக்கில் எழுந்தருளி, கடற்கரையில் ஒன்றாக சேர்ந்து தீர்த்தவாரி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நாகை, காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, பெருமாள்களை தரிசனம் செய்தனர்.
இதேபோல, மாசிமகத்தை முன்னிட்டு, நாகை நீலாயதாட்சியம்மன் கோயில், சவுந்தரராஜ பெருமாள் கோயில், பாப்பாக்கோவில் கஸ்தூரி ரங்கநாத பெருமாள் கோயில், வெளிப்பாளையம் வரதராஜ பெருமாள் கோயில், வெளிப்பாளையம் அகஸ்தீஸ்வரர் கோயில், நாகை சட்டையப்பர் கோயில், மெய்க்கண்ட மூர்த்தி கோயில், நடுவதீஸ்வரர் கோயில், கிருஷ்ணன் கோயில், தாய் மூகாம்பிகை கோயில், அந்தணப்பேட்டை நித்திய கல்யாணப் பெருமாள் கோயில், திருக்கண்ணங்குடி தாமோதர நாராயண பெருமாள் கோயில் ஆகிய கோயில்களில் இருந்து சுவாமிகள் நாகை புதிய கடற்கரையில் நேற்று எழுந்தருளி, தீர்த்தவாரி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கடலில் புனித நீராடினர். முன்னதாக, நாகை நம்பியார் நகர், ஆரியநாட்டுத் தெரு ஆகிய மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் சுவாமிகளுக்கு சீர்வரிசைப் பொருட்களை வழங்கினர். விழாவில், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் தென்னரசு, உதவி ஆணையர் ராணி, நீலாயதாட்சி அம்மன் கோயில் செயல் அலுவலர் பூமிநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல, நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்கரை, மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டம், பூம்புகார் மற்றும் தரங்கம்பாடி கடற்கரைகளிலும் நேற்று தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT