Published : 25 Feb 2021 03:15 AM
Last Updated : 25 Feb 2021 03:15 AM

ரூ.1,330 கோடி மதிப்பிலான நிலக்கரி இறக்குமதி டெண்டரை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு 15 நாட்களில் உரிய அறிவிப்பு வெளியிட உத்தரவு

சென்னை

ரூ.1,330 கோடி மதிப்பிலான நிலக்கரி இறக்குமதி டெண்டரை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், 15 நாட்களில் இதுதொடர்பாக உரிய அறிவிப்பு வெளியிட உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகம் மூலமாக 20 லட்சம் டன் நிலக்கரியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்த அறிவிப்பை கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. அதன்படி இதற்கான டெண்டர் பிப்.23-ம் தேதி இறுதி செய்யப்படவிருந்த சூழலில், தூத்துக்குடியைச் சேர்ந்த தனியார் நிலக்கரி நிறுவனம் சார்பில் திருமலைச்சாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த டெண்டருக்கு தடை கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், இந்த டெண்டரில் உள்நாட்டு நிறுவனங்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை என்றும், வெளிநாட்டு நிறுவனங்களுக்காக டெண்டர் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்த வழக்கு கடந்த 2 தினங்களுக்கு முன்பாக நீதிபதி பி.புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ரூ.2 கோடிக்கு மேற்பட்ட டெண்டர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க குறைந்தபட்சம் 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட வேண்டும். ஆனால் ரூ.1,330 கோடி மதிப்பிலான நிலக்கரி இறக்குமதி டெண்டருக்கு 15 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இது சட்ட விரோதமானது என வாதிடப்பட்டது.

அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, டெண்டர் விண்ணப்பங்களை இறுதி செய்வதற்கான கால அவகாசம் தேர்தல் தேதி அறிவிப்பு காரணமாக 15 நாட்களாக குறைக்கப்பட்டு இருந்தது. தற்போது மேலும் 15 நாட்களுக்கு காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும், நிலக்கரியை வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்பட வேண்டும் என்பதால்தான் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து டெண்டர் கோரப்பட்டுள்ளது என விளக்கமளித்தார்.

இந்நிலையில் நீதிபதி பி.புகழேந்தி, ரூ.1,330 கோடி மதிப்பிலான நிலக்கரி டெண்டரை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், டெண்டருக்கு மேலும் 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழகஅரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் இந்த டெண்டர் அறிவிப்பாணையை இந்திய வர்த்தக இதழில் முறைப்படி வெளியிட வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x