Published : 25 Feb 2021 03:16 AM
Last Updated : 25 Feb 2021 03:16 AM
சாயப்பட்டறைக் கழிவுகளால் பாதிப்படைந்த நொய்யல் ஆறு பகுதியைச் சேர்ந்த திருப்பூர், கரூர், ஈரோடு, கோவை மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 28 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.127 கோடி இழப்பீடு வழங்க அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக கரூர் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் செல்வகுமார், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், ‘‘திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பின்னலாடை மற்றும் சாயப்பட்டறை தொழிற்சாலைக் கழிவுகளால் நொய்யல் ஆறு மாசடைந்துள்ளது. இதனால், திருப்பூர், கரூர், ஈரோடு, கோவை மாவட்டங்களில் விவசாய நிலங்கள் பாதிப்படைந்துள்ளன.
இது தொடர்பாக கடந்த 1996 முதல் உயர் நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
அந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், சாயப்பட்டறை ஆலை அதிபர்கள் ரூ.25 கோடியை டெபாசிட் செய்ய கடந்த 2003-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்த நிலையில், ரூ.25 கோடி உயர் நீதிமன்ற வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, அபராத மாக வசூலிக்கப்பட்ட ரூ.42 கோடி, இழப்பீடாக வசூலிக்கப்பட்ட ரூ.7.64 கோடி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வசம் உள்ளது. தமிழக அரசும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடாக ரூ.75 கோடியை ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த தொகை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முறையாக வழங்கப்படவில்லை. குறிப்பிட்ட சதவீதம் பேருக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
எனவே, கரூர் உள்ளிட்ட மேற்கூறிய மாவட்டங்களில் நொய்யல் ஆறு மாச டைந்ததன் காரணமாக பாதிக்கப்பட்ட 28 ஆயிரம் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் உயர் நீதிமன்ற வங்கிக் கணக்கில் உள்ள ரூ.25 கோடியை தமிழக அரசுக்கு மாற்றம் செய்ய வேண்டும்” என கோரியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கதிரேசன் ஆஜராகி, உயர் நீதிமன்ற வங்கிக் கிளையில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள ரூ. 25 கோடியால் விவசாயிகளுக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லாமல் உள்ளது. எனவே, அந்த தொகையை தமிழக அரசின் வங்கிக் கணக்குக்கு மாற்றம் செய்து, இழப்பீட்டுத் தொகையை பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் முறையாக வழங்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
அதையடுத்து நீதிபதிகள், உயர் நீதிமன்ற வங்கிக் கணக்கில் உள்ள ரூ.25 கோடியை தமிழக அரசுக்கு மாற்றம் செய்ய உத்தரவிட்டனர்.
மேலும், இழப்பீடு கோரி விண்ணப் பித்துள்ள விவசாயிகளின் மனுக்களைப் பரிசீலித்து, தகுதியானவர்களுக்கு வரும் மே 31-ம் தேதிக்குள் உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும். அது தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜூன் 8-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT