Published : 24 Feb 2021 03:18 AM
Last Updated : 24 Feb 2021 03:18 AM

பிரதமர் மோடி நாளை புதுச்சேரி வருகை பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்

புதுச்சேரி

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை (பிப். 25) புதுச்சேரிக்கு வருகை தர உள்ளார்.

டெல்லியிலிருந்து காலையில் தனி விமானத்தில் புறப்பட்டு சென்னை வரும் அவர், அங்கிருந்து தனி விமானத்தில் புதுச் சேரிக்கு வருகிறார்.

தொடர்ந்து புதுச்சேரி ஜிப்மரில் நடைபெறும் அரசு விழாவில் காலை 11.30 மணிக்கு பங்கேற்கிறார்.

விழாவில் காணொலி வழியே காரைக்கால் மாவட்டத்தைஉள்ளடக்கிய ரூ.2,426 கோடி மதிப்பிலான சட்டநாதபுரம் - நாகப்பட்டினம் இடையிலான என்எச் 45-ஏ தேசிய நெடுஞ்சாலைப் பணிகளுக்கும், ஜிப்மர் காரைக்காலில் ரூ.491 கோடி மதிப்பிலான புதிய வளாகம் கட்டவும், சாகர் மாலா திட்டத்தின் கீழ் ரூ.44 கோடியில் புதுச்சேரியில் சிறிய துறைமுகம் அமைக்கவும், புதுச்சேரி இந்திராகாந்தி விளையாட்டுத் திடலில் பழைய ஓட்டப்பந்தய ஓடுதளத்தை மாற்றி ரூ.7 கோடியில் 400 மீட்டரில் செயற்கை ஓடுதளம் அமைக்கவும் அடிக்கல் நாட்டுகிறார்.

தொடர்ந்து ஜிப்மரில் ரூ.28 கோடியில் கட்டப்பட்டுள்ள ஆய்வுக்கூடம் மற்றும் பயிற்சி மையத்துடன் கூடிய ரத்த மையம், மகளிர் விளையாட்டு வீரர்களுக்காக இந்திய விளையாட்டு ஆணையத்தால்

லாஸ்பேட்டையில் ரூ.11.85 கோடியில் கட்டப்பட்டுள்ள 100 படுக்கைகளுடன் கூடிய மகளிர் விடுதி, புதுச்சேரி கடற்கரை சாலையில் ரூ.14.83 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட மேரி கட்டிடம் ஆகியவற்றை திறந்து வைக்கிறார்.

லாஸ்பேட்டையில் பொதுக்கூட்டம்

இதையடுத்து பாஜக சார்பில் லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். அங்கு மேற்கூரையுடன் கூடிய பிரமாண்ட பொதுக்கூட்ட மேடையை பாஜக வினர் தயார் படுத்தி வருகின்றனர்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு 2 கம்பெனியைச் சேர்ந்த200 மத்திய துணை ராணுவப் படையினர் நேற்று காலை புதுச்சேரிக்கு வந்தனர். அவர்கள் பிரதமர் பங்கேற்கும் அரசு விழா மற்றும் பொதுக்கூட்ட அரங்கில் தங்களது பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x