Published : 06 Feb 2021 03:17 AM
Last Updated : 06 Feb 2021 03:17 AM
நூல் விலை உயர்வை கட்டுப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டு மென, மத்திய அரசுக்கு திருப்பூர் தொழில்துறையினர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராஜா எம்.சண்முகம் (திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர்): மத்திய நிதிநிலை அறிக்கையில், இறக்குமதி செய்யப்படும் பஞ்சுக்கு விதிக்கப்பட்டுள்ள கூடுதல் வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும். ஏற்கெனவே நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்களாக முன்வைத்த கோரிக்கைகள் சிலவற்றையும் மத்திய அரசு செய்து தர வேண்டும்.
எம்.பி.முத்துரத்தினம் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத்தலைவர்): பின்னலாடை உற்பத்திமூலப்பொருளான நூல் விலை, வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. கரோனோ பாதிப்பால் அனைத்து நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போது சீனாவுக்கு செல்ல வேண்டிய ஆர்டர்கள் இந்தியாவுக்கு வருகின்றன. இத்தகைய சூழலில் மூலப்பொருள் விலை உயர்ந்தால் வரக்கூடிய ஆர்டர்களை எடுத்து யாரும் ஏற்றுமதி செய்ய முடியாது என்பது தெரியும். இந்தியாவுக்கு வரும் புதிய ஆர்டர்களை தடுத்து நிறுத்தவே, நூல் பதுக்கலில் ஈடுபட்டு செயற்கையாக விலை உயர்வு மேற்கொள்ளப்படுகிறதோ என்ற சந்தேகம் உள்ளது. இதில், அண்டை நாடுகளின் சதி இருக்க வாய்ப்புள்ளது. இப்பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாக கவனம் செலுத்தி, இந்திய தொழில் துறையினருக்கு சாதகமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
எம்.வி.ராமசாமி (திருப்பூர் ரைசிங் உரிமையாளர்கள் சங்கத் தலைவர்): திருப்பூரில் சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து, மீண்டும் பயன்படுத்தும் ஜீரோ டிஸ்சார்ஜ் முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் தங்களது பொறுப்பில் எடுத்துக்கொண்டு குறைந்த கட்டணத்தில் மறுசுழற்சி முறையை செயல்படுத்தினால், திருப்பூரில் உள்ள தொழில் துறையினருக்கு உற்பத்தி செலவினங்கள் குறையும். இதன்மூலமாக, விலையில் சர்வதேச நாடுகளுடன் போட்டியிட முடியும்.
மேலும், கடைநிலை கழிவுநீரை ஜப்பான் நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கடலில் சேர்க்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் சுற்றுச்சூழலை பாதுகாக்கலாம்.
குழாய் மூலமாக எரிவாயு திட்டத்தை திருப்பூரில் உடனடியாக நடைமுறைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் மரங்கள் வெட்டப்படுவது குறையும். மானிய விலையில் எரிவாயு கிடைக்கும்போது உற்பத்தி செலவும் குறையும். மேலும், திருப்பூர் ரயில் நிலையத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT