Published : 05 Feb 2021 03:18 AM
Last Updated : 05 Feb 2021 03:18 AM
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தில் ரயில்வே இருவழிப்பாதை திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், கிழக்கு கடற்கரை ரயில் பாதை உள்ளிட்ட எந்த புதிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை.
நாகர்கோவிலில் இருந்து மதுரை வரை உள்ள ரயில் பாதையை இருவழிப்பாதையாக மாற்ற ரூ.1,182 கோடியில் மதுரை – மணியாச்சி – தூத்துக்குடி (159 கிமீ தூரம்) ஒரு திட்டமாகவும், ரூ.1,003 கோடியில் மணியாச்சி – திருநெல்வேலி – நாகர்கோவில் (102 கிமீ தூரம்) ஒரு திட்டமாகவும் என 2 கட்டங்களாக திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் நாகர்கோவில் - மணியாச்சி இருவழிப்பாதை பணிகளுக்காக ரூ. 200 கோடியும், மதுரை – மணியாச்சி – தூத்துக்குடி திட்டத்துக்கு ரூ. 300 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தென்மாவட்ட ரயில் பயணிகள் சங்க நிர்வாகி பி. எட்வர் ஜெனி கூறியதாவது:
வாஞ்சிமணியாச்சி முதல் திருநெல்வேலி மார்க்கமாக கங்கைகொண்டான் வரையிலும், வாஞ்சிமணியாச்சியிலிருந்து மதுரை மார்க்கமாக கடம்பூர் வரையிலும், வாஞ்சிமணி யாச்சியிலிருந்து தூத்துக்குடி மார்க்கம் தட்டப்பாறை வரையிலும் இருவழிப்பாதை பணிகள் நிறைவு பெற்று 45 கிமீ தூரத்துக்கு சோதனை ஓட்டம் நடைபெற்று பயணிகள் ரயில்கள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருமங்கலத்தில் இருந்து துலுக்கப்பட்டி வரை 41 கிமீ மற்றும் கோவில்பட்டியில் இருந்து திருநெல்வேலி சந்திப்பு வரை 65 கிமீ பணிகள் இன்னமும் சில மாதங்களில் முடிவு பெற்று சோதனை ஓட்டம் நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இருவழிப்பாதையில் 2-வது கட்ட பணிகளாக கங்கைகொண்டான் முதல் திருநெல்வேலி வரை 14 கிமீ தூரமும், கடம்பூர் முதல் கோவில்பட்டி வரை 23 கிமீ தூரமும், தட்டப்பாறை முதல் மீளவிட்டான் வரை 7கிமீ தூரமும், துலுக்கப்பட்டி முதல் திருமங்கலம் வரையில் 41 கிமீ தூரமும் பணிகள் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு இத் திட்டத்துக்கு ரூ.712 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.
இதுபோல், கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் வரை உள்ள 85 கிமீ பாதையை இருவழிப்பாதையாக மாற்ற ரூ. 1,431.90 கோடி திட்டத்துக்கு கடந்த 2015-ம் ஆண்டு பட்ஜெட்டில் ஒப்புதல் அறிவிக்கப்பட்டு 29-12-2017-ம் தேதி கன்னியாகுமரி – நாகர்கோவில் இடையே பணிகள் தொடங்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ. 275 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் காரணமாக பட்ஜெட்டில் புதிய ரயில்வே திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்ப் பார்க்கப்பட்டது. ஆனால், எந்த ஒரு அறிவிப்பும் இல்லை என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT